அரசு ஊழியர்களை வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு ஒரே மாதத்தில் எடுக்கலாம்: ராமதாஸ் பேச்சு

விழுப்புரம்: அரசு ஊழியர்களை வைத்து ஒரே மாதத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என ராமதாஸ் பேசினார். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி விழுப்புரம் நகராட்சி திடலில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: கர்நாடகா, பீகார், தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் நடத்தப்படவில்லை. மகாத்மா காந்தி சுதந்திரத்திற்காக 27 ஆண்டுகள் போராட்டம் நடத்தினார். நான் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டிற்காக 45 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.

அரசு ஊழியர்களை வைத்து ஒரே மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம். இதற்கு ₹500 கோடி செலவாகும். 3 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடப்பதாக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்காததால் காலாவதி ஆகிவிட்டது. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு 13 சதவீதம் கொடுக்க முடிவெடுத்தார். அவருடன் இருந்தவர்கள் இது தொடர்பான கோப்புகளை மறைத்து விட்டனர். தற்போது 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக போராடி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post அரசு ஊழியர்களை வைத்து சாதிவாரி கணக்கெடுப்பு ஒரே மாதத்தில் எடுக்கலாம்: ராமதாஸ் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: