நடப்பாண்டில் 3வது முறையாக 120 அடியை எட்டும் மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,701 கனஅடியாக குறைந்த போதிலும், நீர்மட்டம் 119.41 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஓரிரு தினங்களில், நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 4வது நாளாக விநாடிக்கு 3,500 கனஅடியாக நீர்வரத்து நீடிக்கிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,886 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று விநாடிக்கு 2,701 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.32 அடியிலிருந்து 119.41 அடியாக உயர்ந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 92.53 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும், நீர் திறப்பும் இதே நிலையில் இருந்தால், ஓரிரு தினங்களில் மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நடப்பாண்டில் 3வது முறையாக 120 அடியை எட்டும் மேட்டூர் அணை appeared first on Dinakaran.

Related Stories: