இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206 மற்றும் IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 24ம் தேதி அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 6 நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்களை கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளேன்.

இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், 2 நாட்டுப் படகுகளில் பயணித்த 6 மீனவர்களில், 3 மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் கருவிகள், விஎச்எப் கருவிகள், மீன்பிடி வலை, கையடக்க தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று அடிக்கடி நடக்கும் கைது மற்றும் தாக்குதல் சம்பவங்கள், பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மீனவர்களின் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையையும், ஆபத்தையும் ஏற்படுத்தும்.

2024ம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய சம்பவங்களும், தாக்குதல்களும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: