தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு: முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: தேர்தல் நடத்தை விதியில் சமீபத்தில் ஒன்றிய அரசு செய்த திருத்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. முக்கியமான இச்சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ய அனுமதிக்க முடியாது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா பதிவு, வெப்காஸ்டிங் காட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் விதி 93(2)(பி) பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய சட்ட அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டது. இந்த விதியில் தேர்தல் ஆவணங்கள் என்பவை காகித ஆவணங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே மின்னணு ஆவணங்களை நீக்கி, ‘சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள்’ என திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம், சிசிடிவி பதிவு உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் பெறுவதை ஒன்றிய அரசு முடக்கி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த திருத்தம் செய்யப்பட்டதாகவும், மின்னணு ஆவணங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு பயன்படுத்துவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒன்றிய சட்ட அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ்தள பதிவில், ‘‘தேர்தல் நடத்தை விதி திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் நேர்மை வேகமாக சிதைந்து வருகிறது. அதை மீட்டெடுக்க உச்ச நீதிமன்றம் உதவும் என நம்புகிறோம். சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த கடமைப்பட்டுள்ள அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையம், ஒருதலைப்பட்சமாக பொது ஆலோசனையின்றி தன்னிச்சையாக இதுபோன்ற முக்கிய சட்டத்தை இவ்வளவு மோசமான முறையில் திருத்துவதை அனுமதிக்க முடியாது’’ என கூறி உள்ளார்.

The post தேர்தல் விதியில் திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங். வழக்கு: முக்கிய சட்டத்தை தன்னிச்சையாக திருத்தம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: