ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று வலுவிழக்கிறது; தமிழகத்தில் 30ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் தெற்கு ஆந்திரப் பகுதியில் நிலை ெகாண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து காற்றழுத்தமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோரப் பகுதியில் 30ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை முடிவடைய உள்ள நிலையில் அடுத்த 2025ம் ஆண்டுக்கான நீண்ட கால வானிலை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. வானிலை தொடர்பான நீண்ட கால ஆய்வுகளின் அடிப்படையில் 2025ம் ஆண்டில் மழை பெய்யும் நிலை குறித்து ஆய்வு அறிக்கையில் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடல் அமைப்பை பொருத்தவரையில் தமிழக கரையோரம் 29 டிகிரி செல்சியஸ், கொல்கத்தா கடலோரம் 28 டிகிரி செல்சியஸ், தெற்கு அந்தமான் பகுதியில் 29 டிகிரி செல்சியஸும் சில இடங்களில் 30 டிகிரி செல்சியஸ், சுமத்ராதீவு 30 டிகிரி செல்சியஸ், இந்தியப் பெருங்கடல் 29 டிகிரி செல்சியஸ் என தற்போது கடல் வெப்பம் நிலவுகிறது. அதேநேரத்தில் தெற்கு அரபிக் கடல் பகுதியில் 30 டிகிரி செல்சியஸாக கடல் வெப்பம் இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் வெப்பம் உயர்ந்துள்ளது.

அத்துடன், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நீரோட்டம் தற்போது வங்கக் கடலில் உள்ளது. இலங்கை தெற்குப்பகுதி மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் வலிமையான வெப்ப நீரோட்டத்தின் பிடியில் இருக்கின்றன. இதனால் வங்கக் கடல் பகுதியில் சரியாக கணிக்க முடியாத வானிலைக்கு அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. திடீரென வேகம் எடுக்கும், திடீரென செயலிழத்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பது கணிக்க முடியாத நிலையை உருவாக்கும் தன்மை நிலவுகிறது.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உள்ளது. இந்த கடல் வெப்பம் வங்காள விரிகுடா பகுதிக்கு காற்று சுழற்சிகளை கொண்டு வருவதில் சாதகமாக இருக்கின்றன. அமெரிக்கப் பகுதியை விட ஆசியப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து வெப்ப நீரோட்டமும் ஆசியப் பகுதியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது என்றும் ெதரிவிக்கின்றனர். அதனால் லா-நினோ அமைப்பு கண்டிப்பாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பருவமழை முடிவடைய உள்ள நேரம். தற்போது கடல் வெப்பநிலை என்பது 27 டிகிரி செல்சியசுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 30 டிகிரியில் இருப்பதாலும், வலிமையான வெப்பத்தை கொடுத்துக் கொண்டு இருப்பதாலும், வெப்ப உயர்வு இருப்பதால், இந்த ஆண்டு பெரிய அளவில் குளிர் இல்லாமல் போனது. இதனால் 2025ல் மழை பொழிவு மட்டும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் 2025ல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், டிசம்பர் இறுதியிலும், ஜனவரி மாதத்தில் 10ம் தேதி வரையிலும் 3 காற்று சுழற்சிகள் இலங்கை பகுதியில் உருவாகி அதன் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு நெருக்கமாக வந்தும் குமரிக் கடல்பகுதியில் நிலை கொண்டும் மழை பொழிவைக் கொடுக்கும். பொங்கல் பண்டிகையின்போதும் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், தற்போது வங்கக் கடலில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டது. மேலும் இது மேற்கு- தென்மேற்கு திசையில் இன்று நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே இடத்தில் வலுவிழக்கும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும்.

இதற்கிடையே, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக 26ம் தேதி தமிழகத்தில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதே நிலை 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இயல்பை விட 33% கூடுதல் மழை
இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 24ம் தேதி வரையில் இயல்பாக 433 மிமீ மழை பெய்ய வேண்டும். மேற்கண்ட கால கட்டத்தில் 575 மிமீ வரையில் மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 33 சதவீதம் ்கூடுதல் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post ஆழ்ந்த காற்றழுத்தம் இன்று வலுவிழக்கிறது; தமிழகத்தில் 30ம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: