×

பணக்கார ஆண்களை குறிவைத்து கடந்த 10 ஆண்டுகளில் 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ1.25 கோடி சுருட்டிய இளம்பெண்: இயற்கைக்கு மாறான உடலுறவு புகாரில் சிக்க வைத்த கொடுமை


ஜெய்ப்பூர்: பணக்கார ஆண்களை குறிவைத்து கடந்த 10 ஆண்டுகளில் 3 பேரை திருமணம் செய்து ரூ1.25 கோடி சுருட்டிய இளம்பெண்ணை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவருக்கு, திருமண தகவல் இணையதளம் மூலம் கடந்தாண்டு உத்தராகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த சீமா அகர்வால் என்ற பெண் அறிமுகமானார். இருவரும் சமூக வலைதளங்கள், செல்போன் வாயிலாக காதலை வளர்த்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ப்பூரில் விமரிசையாக திருமணம் நடைபெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு சீமா அகர்வால் திடீரென மாயமானார். வீட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கத்தையும் காணவில்லை.

அதிர்ச்சியடைந்த நகைக்கடை உரிமையாளர், சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய மனைவியிடம் நகை, பணம் மாயமானது குறித்து கேட்டார். அதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. ஒருகட்டத்தில் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீது சீமா அகர்வால் புகார் அளித்தார். அதில், இயற்கைக்கு மாறான உடல் உறவு, வரதட்சணை கேட்டு தனது கணவர் சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதையறிந்த நகைக்கடை உரிமையாளர், தனது தரப்பு நியாயத்தை முன்வைத்து ஜெய்ப்பூர் போலீசில் தனியாக புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், நகைக்கடை உரிமையாளர் கூறுவது உண்மை என்பதும் சீமா அகர்வால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்பதும் தெரியவந்தது. அதையடுத்து டேராடூனில் இருந்த சீமா அகர்வாலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்துள்ளன.

இதுகுறித்து ஜெய்ப்பூர் போலீஸ் டிசிபி அமித் குமார் கூறுகையில், ‘திருமண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீமா அகர்வால் இதுவரை 3 திருமணங்களை செய்துள்ளார். முதலில் அவர் உத்தரபிரதேசத்தின் ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு தொழிலதிபரின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது டேராடூன் போலீஸ் நிலையத்தில் சீமா புகார் அளித்துள்ளார். இயற்கைக்கு மாறான உடல் உறவில் கணவர் ஈடுபட்டதாக அவர் புகார் கூறியதால், ஆக்ரா தொழிலதிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை வாபஸ் பெற ஆக்ரா தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை சீமா அகர்வால் மிரட்டி பெற்றார்.

பின்னர் அரியானா மாநிலம் குர்காவ்ன் நகரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினீயரை, இரண்டாவதாக சீமா திருமணம் செய்தார். சில மாதங்களுக்கு பிறகு 2வது கணவரின் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் அவர் தலைமறைவாகிவிட்டார். வழக்கம்போல டேராடூன் காவல் நிலையத்தில் 2வது கணவர் மீதும் புகார் அளித்தார். அதில் கணவர் இயற்கைக்கு மாறான உடல் உறவுக்கு வற்புறுத்தினார். கணவரின் தம்பி பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கை வாபஸ் பெற குர்காவ்ன் சாப்ட்வேட் இன்ஜினீயரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை சீமா பெற்றுள்ளார். இதன்பிறகு ஜெய்ப்பூரை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை சீமா 3வது முறையாக திருமணம் செய்துள்ளார். தற்ேபாது அவரையும் முதல் 2 கணவர்களிடமும் ஏமாற்றியது போன்று நாடகத்தை அரங்கேற்ற முயன்றார். தற்போது வசமாக சிக்கிக் கொண்டார்.

முதல் கணவரிடம் ரூ.75 லட்சம், 2வது கணவரிடம் ரூ.10 லட்சம், 3வது கணவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பு நகைகள், ரூ.6.5 லட்சம் ரொக்கத்தை சீமா அகர்வால் அபகரித்துள்ளார். மூன்று கணவர்களிடம் இருந்து சுமார் ரூ.1.25 கோடியை சுருட்டி உள்ளார். இவர்கள் மட்டுமின்றி வேறு யாரையாவது திருமணம் செய்து ஏமாற்றினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். பெரும் பணக்காரர்களை தனது கள்ளக்காதல் வலையில் சிக்க வைத்து, அதன் மூலம் அவர்களை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவர் மீது வரதட்சணை கொடுமை, இயற்கைக்கு மாறான உடலுறவு என்று குற்றம் சாட்டி பணம் பறித்த சீமா அகர்வால், கடந்த 2013ம் ஆண்டு முதல் திருமண மோசடி வேலைகளை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசடி காதல் நாயகி
1. ஆக்ரா தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம்
2. சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.10 லட்சம்
3. நகைக்கடை உரிமையாளரிடம் ரூ. 37 லட்சம்

The post பணக்கார ஆண்களை குறிவைத்து கடந்த 10 ஆண்டுகளில் 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ1.25 கோடி சுருட்டிய இளம்பெண்: இயற்கைக்கு மாறான உடலுறவு புகாரில் சிக்க வைத்த கொடுமை appeared first on Dinakaran.

Tags : Jaipur ,Rajasthan ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் பயங்கரம் விபத்தில்...