×

சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

வடலூர், டிச. 24: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சேப்ளாநத்தம் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 125க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் நேற்று சத்துணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது உணவை சாப்பிட்ட 7ம் வகுப்பு மாணவி உணவில் புழு, பூச்சிகள் கிடப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்தார்.

இதனால் அந்த ஆசிரியர் சத்துணவு பொறுப்பாளரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உணவை சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவிகள் கனியா, நர்மதா, 7ம் வகுப்பு மாணவிகள் துளசி, அட்சயா, செல்வநாயகி ஆகிய 5 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் 5 மாணவிகளை மீட்டு வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘சத்துணவு பொறுப்பாளர் சுகாதாரமான முறையில் மாணவர்களுக்கு உணவுகள் வழங்குவது கிடையாது. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் உதயகுமார், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன், கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வடலூர் எஸ்ஐ ராஜாங்கம் மற்றும் போலீசார் பெற்றோரிடம் சமாதானம் கூறினர். பின்னர் மாணவிகளை மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post சத்துணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Vadalur ,Zaplanatham ,Neyveli ,Cuddalore ,State High School ,
× RELATED வடலூர் மருவாய் பகுதிகளில் தொடர் கனமழை:...