மரக்காணம், டிச. 24: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன்(53). லாரி ஓட்டுநரான இவருக்கு லோகேஷ்(24), விக்ரம்(22), சூர்யா (22) என 3 மகன்கள் இருந்தனர். இதில் விக்ரம் மற்றும் சூர்யா இரட்டையர். சகோதரர்கள் 3பேரும் தினக்கூலியாக வேலை செய்து வந்த நிலையில், எங்கு சென்றாலும் ஒன்றாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தந்தை கணேசனுடன் இணைந்து மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க வலையுடன் சென்றுள்ளனர். கால்வாய்க்கு அருகில் அமர்ந்து 3பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, பக்கிங்ஹாம் கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனால் கால்வாய்க்கு மிக அருகில் நின்று வலையைப் பிடித்துக் கொண்டிருந்த லோகேஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதைப்பார்த்ததும் லோகேஷை காப்பாற்ற இரட்டை சகோதரர்களான விக்ரம் மற்றும் சூரியா ஆகியோர் அடுத்தடுத்து பக்கிங்காம் கால்வாயில் குதித்துள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சகோதரர்கள் 3 பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதை நேரில் பார்த்து கதறிய தந்தை கணேசன் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் உடனே பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கு விரைந்து வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள், 3 சகோதரர்களை தேடியதுடன் மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்துவதற்குள், தகவலறிந்து அங்கு நுற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
இதனால் மரக்காணம்- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மரக்காணம் வட்டாட்சியர் பழனி, கோட்டகுப்பம் டிஎஸ்பி உமாதேவி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு, மரக்காணம் வருவாய் ஆய்வாளர் வனமயில் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், மரக்காணம் பகுதி மீனவர்களின் உதவியுடன் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விசை படகுகளைக் கொண்டு வெள்ளத்தில் மூழ்கிய சகோதர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு ஆனதால் தேடுதல் பணி 12.30 மணிக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல் விழுப்புரம் மாவட்ட திமுக மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார் ஏற்பாட்டின்படி 5க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்களுடன், திமுகவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மற்றொருபுறம் அதிகாரிகளும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
காலை 8.30 மணியளவில், வெள்ளத்தில் மூழ்கி முதலில் மாயமான லோகேஷின் உடல், அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் தண்ணீரில் மிகுந்தபடி இருந்தது. லோகேஷின் உடலை மீட்ட மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக கனகச்செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரட்டை சகோதர்களை தேடும் பணி தீவிரமடைந்தது. விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கைபடி சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த நீர் மூழ்கி வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவர்கள் பாதுகாப்பு ஜாக்கெட், ஆக்சிஜன் சிலிண்டர்களை உடலில் பொருத்திக் கொண்டு தீயணைப்பு துறை மற்றும் போலீசார் உதவியுடன் கால்வாயில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நேற்று மாலை 4.40 மணியளவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விக்ரமின் உடல் 200 மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது. மாலை 5.45 மணியளவில் சிறிது தூரத்தில் சூரியா சடலம் மீட்கப்பட்டது. இதற்கிடையே, பாதிக்கப்பட்ட கணேசனின் குடும்பத்துக்கு திமுக சார்பில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் ரவிக்குமார், மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், விசிக எம்பி ரவிக்குமார், விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் மலைச்சாமி, அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன், பாஜக மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.
The post வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்கள் உடல் மீட்பு appeared first on Dinakaran.