×

ரூ.64 கோடி செலவில் 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கோவை, தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 171 பள்ளிகளில் ரூ.56.11 கோடி செலவில் 350 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் மற்றும்

அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைக்கு புத்துயிர் அளித்தல் திட்டத்தின் கீழ், தருமபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 24 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ரூ.8.33 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் என மொத்தம் 21 மாவட்டங்களிலுள்ள 195 பள்ளிகளில் ரூ.64.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறைக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதேபோல, தற்போது வரை 314 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 274 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோவை – மதுக்கரை, புதுக்கோட்டை – திருமயம், விருதுநகர் – ராஜபாளையம், ராணிப்பேட்டை – திமிரி, தென்காசி – குருவிகுளம், திருவாரூர் – கோட்டூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.35 கோடியே 24 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுமட்டுமின்றி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), திட்ட இயக்குநர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, செயற்பொறியாளர்கள், உதவி இயக்குநர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.8 கோடியே 46 லட்சம் மதிப்பிலான 95 வாகனங்களை வழங்கிடும் வகையில், அந்த வாகனங்களுக்கான சேவையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதேபோல், இந்திய அளவில் 2024ம் ஆண்டு உட்கட்டமைப்புகளில் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றியம், கீரநத்தம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசுக்கான விருதும், மகளிருடன் நல்லிணக்கம் கொண்ட ஊராட்சியாக தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம், வரகனூர் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு மூன்றாம் பரிசுக்கான விருதும் இந்திய குடியரசு தலைவரால் இம்மாதம் 11ம் தேதி வழங்கப்பட்டது.

இந்த விருதுகளை பெற்ற கீரநத்தம் ஊராட்சிமன்ற தலைவர் பழனிசாமி மற்றும் வரகனூர் ஊராட்சிமன்ற தலைவர் சுப்புலட்சுமி ஆகியோர் முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ரூ.64 கோடி செலவில் 195 பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Rural Development and ,Panchayat Department ,Chennai Secretariat… ,
× RELATED திறமையை வெளிப்படுத்துங்கள் நம்...