×

சிறுபான்மையினருக்கு ஒன்றிய அரசு இழைக்கும் கொடுமைகளை தடுக்கும் காவல் அரணாக செயல்படுவோம்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் கழகச் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் நடைபெற்ற அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா 2024ல் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ஒன்றியத்தை ஆளும் பாஜ அரசு, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அரசாக இருக்கிறது. சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எல்லாம் விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கொடுமைகளை எதிர்க்கும் தடுக்கும் காவல் அரணாக திமுக தொடர்ந்து செயல்படும்.

சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வலிமையான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தியது, திமுக ஆனால், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த கட்சி, அதிமுக. ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொருத்தவரைக்கும், மதச்சார்பின்மை என்ற சொல்லையே அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கத் துடிக்கிறார்கள். அந்தச் சொல்லை நீக்க முடியவில்லை என்றால், அரசியலமைப்புச் சட்டத்தையே நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் காந்தியடிகளின் படத்தை சம உரிமைத் தத்துவத்தின் அடையாளமாக இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற அமைச்சகமே புறக்கணிக்கும் அளவிற்கு மதவாதம் ஒன்றியத்தில் ஆட்சி செலுத்துகிறது. நல்லிணக்க இந்தியாவில் இப்படிப்பட்ட பிளவுவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அதனால்தான், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பா.ஜ.க.வுக்குப் பெரும்பான்மை பலத்தை அளிக்கவில்லை.

மக்களின் ஒற்றுமை – ஜனநாயகச் சக்திகளின் அணித் திரட்சி அவர்களுக்குக் கடிவாளம் போட்டிருக்கிறது. அதனால், “ஒரே நாடு – ஒரே தேர்தல்” என்று சொல்லி, ஒற்றுமை இந்தியாவை சிதைத்து, ஒற்றை இந்தியாவை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற ஒற்றை எதேச்சாதிகார முடிவை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் பற்றும், நாட்டுப் பற்றும் உள்ள ஒவ்வொரு இந்தியரும் இதற்கு எதிராக இருப்பார்கள். நாடு நல்லவர்களின் கைகளில் பாதுகாப்பாக இருக்கும். அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமத்துவமாக வாழும் நாள் நிச்சயம் விடியும் சிறுபான்மையினர் உரிமைக்காக திமுக எந்தவித சமரசமும் இல்லாமல் போராடும் என்ற உறுதியை மீண்டும் அளிக்கிறேன்.

The post சிறுபான்மையினருக்கு ஒன்றிய அரசு இழைக்கும் கொடுமைகளை தடுக்கும் காவல் அரணாக செயல்படுவோம்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,Chief Minister ,M.K. Stalin ,Christmas festival ,Chennai ,Anbin Iniya Christmas Festival 2024 ,Minority Welfare and Rights Unit ,Don Bosco School ,Perambur, Chennai ,BJP government ,Union ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழு...