×

சென்னை புத்தக கண்காட்சியில் 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது

சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 48வது புத்தகக் காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் முருகன் உள்ளிட்டோர் நிருபர்களிடம் கூறியதாவது:

48வது சென்னை புத்தகக் கண்காட்சியை சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 27ம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றுகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரை ஆற்றுகிறார். மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியானது விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதில் உறுப்பினர் அல்லாத 250 பேர் வரை அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சர்வதேச பதிப்பகங்களுக்கு கூடுதல் அரங்குகள் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு மழை பாதிப்பு இருந்ததால் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்த ஆண்டு இன்னும் கூடுதல் கவனத்தோடு அரங்குகளை பாதுகாப்பாக ஏற்படுத்தி இருக்கிறோம். பிரெய்லி புத்தகங்கள் வைப்பதற்கான அரங்கு ஒன்று வாடகை இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கும் இந்த ஆண்டு இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, புத்தகக் காட்சியை ஒட்டி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 10 லட்சம் விலையில்லா அனுமதிச் சீட்டுக்கள் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். மேலும் சென்னை புத்தகக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு உரைநடைக்கு பேராசிரியர் அருணன், கவிதைக்கு நெல்லை ஜெயந்தா, நாவலுக்கு சுரேஷ் குமார இந்திரஜித், சிறுகதைகளுக்கு என். ஸ்ரீராம், நாடகத்திற்கு கலைராணி, மொழிபெயர்ப்புக்கு நிர்மால்யா ஆகிய 6 பேர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற இருக்கிறார்கள். பொற்கிழி விருது பெறும் 6 பேருக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்பட உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்திற்கு கலைஞர் ஒரு கோடி ரூபாய் வழங்கியிருந்தார். அது அப்படியே உள்ளது. அதிலிருந்து வரும் வட்டியை நாங்கள் ஆண்டுதோறும் பொற்கிழி விருது பெறுபவர்களுக்கு வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* பபாசி விருதுகள் அறிவிப்பு
பபாசி சார்பிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு கற்பகம் புத்தகாலயத்திற்கு சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது, கோதண்டராமனுக்கு சிறந்த நூலகருக்கான விருது, பெல்-கோவிற்கு சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது, எழுத்தாளர் ஜோதி சுந்தரேசனுக்கு சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ வள்ளியப்பா விருது, முனைவர் சபா.அருணாச்சலத்திற்கு சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது,

பேராசிரியர் பர்வீன் சுல்தானாவிற்கு சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது, எழுத்தாளர் சங்கர சரவணனுக்கு சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது, மணவை பொன்.மாணிக்கத்திற்கு முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது, மரபின் மைந்தன் முத்தையாவிற்கு சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனை கவிஞர் கவிதாசன் விருது வழங்கப்படுகிறது.

The post சென்னை புத்தக கண்காட்சியில் 6 பேருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருது appeared first on Dinakaran.

Tags : Chennai Book Fair ,Chennai ,Nandanam ,Y. M. C. ,48th Book Fair ,A Ground ,South Indian Booksellers and Publishers Association ,Y. M. C. Held ,Dinakaran ,
× RELATED பள்ளத்தில் இறங்கி ஏறியபோது...