×

கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைகிறதாம் 5, 8ம் வகுப்புகளுக்கு இனி ஆல் பாஸ் இல்லை: தோல்வியடைந்தால் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வேண்டும், ஒன்றிய அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளிகளில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற ‘ஆல் பாஸ்’ முறையை ஒன்றிய அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்வில் தோல்வி அடைந்தால் 2 மாதத்தில் மறு தேர்வு நடத்த வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், மாணவர்கள் தோல்வி அடைந்தவர்களாக அறிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஇ) 8ம் வகுப்பு வரையிலும் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் ‘ஆல் பாஸ்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால், கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 2019ம் ஆண்டில் ஒன்றிய அரசு ஆர்டிஇ விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன்படி, தொடக்கப் பள்ளிகளில் 5ம் வகுப்பிலும், நடுநிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பிலும் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறினால் அவர்களை மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்கலாம் என திருத்தம் கொண்டு வந்தது.

இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் என்ற நடைமுறையை முழுவதுமாக நீக்கி ஒன்றிய அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அந்த அரசாணையில், ‘5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு வழக்கமான தேர்வுகள் நடத்திய பிறகும், ஒரு மாணவன் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அவருக்கு கூடுதல் ஆதரவுகளும், ஆலோசனைகளும் வழங்கி, தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 2 மாதத்திற்குள் மறுதேர்வு எழுதும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

மறுதேர்விலும் அந்த மாணவன் தேர்ச்சி பெறத் தவறினால், அவரை மீண்டும் 5ம் வகுப்பிலோ அல்லது 8ம் வகுப்பிலோ தொடர்ந்து படிக்க வைக்கலாம். இவ்வாறு மீண்டும் அதே வகுப்பில் மாணவரை படிக்க வைக்கும் போது, அதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரோ அல்லது வகுப்பு ஆசிரியரோ, அந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து 5 அல்லது 8ம் வகுப்பில் அந்த மாணவர் தேர்ச்சி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அத்துடன், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களின் பட்டியலை தயார் செய்து, அவர்களின் கற்றலில் உள்ள குறைபாடுகள், அவர்கள் பெறும் மதிப்பெண்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து தேவையான கற்றல் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இருப்பினும், தொடக்க கல்வியை மாணவ மாணவியர் முடிக்கும் வரையில் அவர்களை எந்தப் பள்ளியில் இருந்தும் வெளியேற்றக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மற்றும் சைனிக் பள்ளிகள் உள்பட ஒன்றிய அரசால் நடத்தப்படும் 3000 பள்ளிகளுக்கும் பொருந்தும். பள்ளிக் கல்வி என்பது மாநில பாடம் என்பதால் மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தாங்களே முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். டெல்லி உள்பட 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் இந்த 2 வகுப்புகளுக்கான ‘ஆல்பாஸ்’ முறையை ரத்து செய்யும் ஆர்டிஇ திருத்தத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளன.

அரியானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் இன்னும் இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை’’ என தெரிவித்துள்ளனர். இந்த திருத்தம் 2019ம் ஆண்டே கொண்டு வரப்பட்டாலும், அதற்கான அரசாணை வெளியிட சுமார் 5 ஆண்டுகள் கால தாமதம் ஆனது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த திருத்தம் கொண்டு வந்த அடுத்த 6 மாதத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. எனவே, புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎப்) தயாராகும் வரையிலும் அதன் பரிந்துரைக்காக காத்திருந்தோம்.

பின்னர் 2023ல் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு தயாரானது. அதைத் தொடர்ந்து, ஆர்டிஇ விதிகளில் சில திருத்தங்களை கல்வி அமைச்சகம் கொண்டு வந்து அமல்படுத்தியது. இதுதான் தாமதத்திற்கு காரணம்’’ என்றனர். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கத்தான் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது. தற்போது இதை ரத்து செய்வது, மீண்டும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்க வழிவகுக்கும் என கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

* ‘மாநில கல்வி உரிமைகள் மீது ஒன்றிய அரசு கை வைக்கிறது’ஆல்பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 என்கிற சட்டத்தின் சிறப்பு அம்சமே, குழந்தைகள் கல்வியை பார்த்து பயப்பட கூடாது என்பதுதான். எனவேதான் இந்த சட்டத்தில் 8ம் வகுப்பு வரை வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வுகள் கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் ஆசிரியர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இதில், எந்தெந்த மாணவர்கள் கற்றலில் பின்தங்குகிறார்களோ, அவர்களை கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சிகளை ஆசிரியர்கள் கொடுக்க வேண்டும். இது இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கல்வி கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வெற்றி, தோல்வியை நிர்மாணிக்கும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதனை அந்தந்த மாநிலங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இப்படி சொல்லிவிட்டு, இப்போது வந்து 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடையாது, தேர்வு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை கை வைக்கும் நடைமுறையாகும். மாநிலங்கள் மீது மத்திய அரசு தனது முடிவுகளை திணிக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், நாடு முழுவதும் பெரும் பகுதியான பள்ளிகளை மாநில அரசுகள்தான் நடத்துகின்றன. அப்படி இருக்கும் போது தங்கள் குழந்தைகளுக்கு எந்த மாதிரியான தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள்தான் முடிவு செய்யும். இதில் மத்திய அரசு தலையீடு ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

* தமிழ்நாட்டு பள்ளிகளுக்கு பொருந்தாது: அமைச்சர் திட்டவட்டம்
சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது. தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இனி ஆல் பாஸ் கிடையாது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றி நடத்தப்படும் ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கு, இந்தப் புதிய நடைமுறை பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.

ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேசியக் கல்விக் கொள்கையைப் பின்பற்றாமல், நமது மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

தமிழ்நாட்டில், மாநிலக் கல்விக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர பிற பள்ளிகளுக்குப் பொருந்தாது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்ட விதிகள் குறித்து எந்தவகையிலும் குழப்பமடையத் தேவையில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

The post கட்டாய தேர்ச்சி முறையால் கல்வித் தரம் குறைகிறதாம் 5, 8ம் வகுப்புகளுக்கு இனி ஆல் பாஸ் இல்லை: தோல்வியடைந்தால் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வேண்டும், ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU Government ,Chennai ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...