அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். “அயல்நாட்டு கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணச் செலவை அரசே ஏற்கும். திட்டத்துக்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது; “திராவிடமாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

அரசுப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விச் செலவினை அரசே முழுமையாக ஏற்கும். மேலும், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்றுச் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகையை முழுமையாக இவ்வரசே ஏற்றுக்கொள்ளும். இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

நம் தமிழ்நாட்டு மாணவர்களை உலகம் போற்றும் அறிஞர்களாக உருவாக்க, இந்தியாவிற்கே முன்மாதிரியான பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

The post அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார்: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Related Stories: