சுதந்திரமான, நியாயமான தேர்தல் மீது தாக்குதல்: தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!

சென்னை: தேர்தல் ஆணையம் மேற்கொண்ட திருத்தம் மிகவும் ஆபத்தானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்தல் முறையை ஒழிக்கும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் 93 (2) (அ)-இல் செய்யப்பட்டுள்ள ஆபத்தான திருத்தத்தால் மக்களாட்சி தனது மிகப்பெரும் அச்சுறுத்தலை ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் இருந்து எதிர்நோக்கியுள்ளது.

குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் சி.சி.டி.வி. காட்சிப் பதிவுகளை வழங்குமாறு பஞ்சாப் – மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, சி.சி.டி.வி. பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற ஆவணங்கள் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் ஒன்றிய அரசானது இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையான கூறுகளுள் ஒன்றினை அழித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் பயம் ஹரியானா மாநிலத் தேர்தலோடு நிற்கவில்லை, அண்மையில் மகாராஷ்டிர மாநிலத்தில் அவர்கள் தேர்தலின் புனிதத்தன்மையைக் கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி தீவிரமான எதிர்ப்புக்கு ஆளாகியிருப்பதால் அடைந்துள்ள பதற்றத்தின் எதிரொலிப்பாகவே இது அமைந்துள்ளது.

தனது அமைப்பின் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்குப் பதிலாகத் தேர்தல் ஆணையமும் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்திருப்பதும், நேர்மையான – நியாயமான தேர்தல் எனும் தனது குழந்தையையே அது உருக்குலைத்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

நம் நாட்டில் சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான இந்தத் தாக்குதலை எதிர்க்க பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

The post சுதந்திரமான, நியாயமான தேர்தல் மீது தாக்குதல்: தேர்தல் விதிகள் திருத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!! appeared first on Dinakaran.

Related Stories: