×

நெல்லை அருகே திடியூர் பகுதியில் 6 டன் மருத்துவ கழிவுகளை கொட்டி தீவைத்தவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

நெல்லை : நெல்லை அருகே 6 டன் கேரளா மருத்துவ கழிவுகளை லாரிகளில் கொட்டி தீவைத்தவர்கள் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை அடுத்த கோடகநல்லூர் தனியார் தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில் கேரளாவின் மருத்துவ கழிவுகள், உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக்கழிவு பொருட்கள் உள்ளிட்டவைகள் மூடை மூடையாக கொட்டப்பட்டு தீவைத்து எரித்து விடுவர். ஆனால் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழை காரணமாக அந்த மருத்துவ கழிவுகளை எரிக்காமல் லாரி டிரைவர்கள் அப்படியே போட்டு சென்று விட்டனர்.

இதன் காரணமாக மருத்துவ கழிவு பொருட்கள் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கேரளாவிலுள்ள மருத்துவ கழிவு பொருட்கள், கழிவு பொருட்களை லாரிகள் மூலம் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து சேரன்மகாதேவி சப்-டிவிஷன் போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து சுத்தமல்லியை சேர்ந்த இடைத்தரகர்கள் மாயாண்டி (42), மனோகர் (51), கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த மருத்துவ கழிவு மேலாண்மை நிறுவன மேற்பார்வையாளர் ஜித்தன் ஜார்ஜ், சேலம் ஓமநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் செல்லத்துரை ஆகிய 4 பேரை நெல்லை மாவட்ட தனிப்படையினர் கைது செய்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவிலுள்ள மருத்துவ கழிவுகளை லாரிகள் மூலம் முன்னீர்பள்ளம் அருகேயுள்ள திடீயூர் சாலையோர நிலத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதுபோன்று சுத்தமல்லியில் மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்வதை அறிந்த மர்ம நபர்கள் திடீரென நேற்று மதியம் திடியூர் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவு பொருட்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனை தொடர்ந்து அவ்வழியாக சென்ற பொதுமக்களில் சிலர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாளை தாசில்தார் இசைவாணி, இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சேரன்மகாதேவி நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி (ஒரு மணி நேரம்) போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சுமார் 6 டன் கேரளாவின் மருத்துவ கழிவுகளை திடியூரில் கொட்டி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post நெல்லை அருகே திடியூர் பகுதியில் 6 டன் மருத்துவ கழிவுகளை கொட்டி தீவைத்தவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Didiur ,Nella ,Kerala ,Nellai ,Godaganallur ,Nelal ,Dinakaran ,
× RELATED மருத்துவக் கழிவுகள் அகற்றம்: நெல்லை ஆட்சியர் விளக்கம்