×

மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணன், 2 தம்பிகள் மாயம்

*தேடும் பணி தீவிரம்

மரக்காணம் : மீன் பிடித்து கொண்டிருந்தபோது, பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்து மாயமான அண்ணன், தம்பிகள் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு பகுதியில் வசித்து வருபவர் கணேசன்(50).

இவரது மகன்கள் லோகேஷ்(24), விக்ரம்(22) மற்றும் சூர்யா (22). இதில் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் இரட்டையர்கள். அண்ணன், தம்பிகள் 3 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தூண்டில் போட்டு மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள மேம்பாலம் பகுதியில் இருக்கும் பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர். அங்கு 3 பேரும் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இந்த கால்வாயில் பெஞ்சல் புயலின்போது பெய்த கன மழையின காரணமாக தற்போதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கால்வாயில் தவறி விழுந்த லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதை பார்த்த விக்ரம், சூர்யா ஆகியோர் அண்ணனை காப்பாற்ற இவர்களும் கால்வாயில் குதித்துள்ளனர். ஆனால் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு சென்றதால், இவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

இதை அருகில் இருந்து பார்த்தவர்கள், உடனடியாக மரக்காணம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மரக்காணம் போலீசார் மற்றும் மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று பக்கிங்காம் கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அண்ணன், 2 தம்பிகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Buckingham canal ,Marakkanam ,Ganesan ,Market Grove ,Villupuram district ,
× RELATED மரக்காணம் பகுதியில் 19 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை