தாராபுரம் : ‘எனக்கு சமமாக சேரில் அமர்ந்து டீ குடிப்பாயா?’ எனக் கேட்டு வாலிபரை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ள நத்தப்பாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் கருப்புசாமி (36).
மூலனூர் ஊராட்சி ஒன்றியம் ,தூராம்பாடி ஊராட்சியில் தற்காலிக வாட்டர் மேனாக பணியாற்றி வருகிறார். கடந்த 17ம் தேதி காலை நத்தப்பாளையம் வஞ்சியம்மன் பேக்கரியில் அங்குள்ள சேரில் அமர்ந்து கருப்புசாமி டீ குடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் மூலனூர் பம்மிபாளையம் அதிமுக பிரமுகரான சென்னியப்பன் (50) என்பவரும் சேரில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார்.
அவர் கருப்புசாமியை முறைத்து பார்த்துவிட்டு சென்றாராம். மறுநாள் (18ம் தேதி) நத்தபாளையம் பெட்ரோல் பங்க் அருகே கருப்புசாமி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் சென்னியப்பன் வந்தார்.
அவர் கருப்புசாமியை வழிமறித்து நிறுத்தி, ‘நேற்று பேக்கரியில் அமர்ந்து நான் டீ குடித்துக் கொண்டிருந்தபோது எனக்கு சமமாக நீயும் சேரில் அமர்ந்து டீ குடிப்பாயா?’ என ஆத்திரத்துடன் அவரது ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியுள்ளார்.மேலும் கருப்புசாமியின் கன்னத்தில் தாக்கியதுடன், எட்டி உதைத்ததாகவும் தெரிகிறது.
இதனால் வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த கருப்புசாமியை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மூலனூர் போலீசார் கருப்புசாமியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் புகாரை பெற்று எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் சென்னியப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அதிமுக பிரமுகர் சென்னியப்பன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியை அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ‘எனக்கு சமமாக சேரில் அமர்ந்து டீ குடிப்பாயா?’ வாலிபரை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவின்கீழ் வழக்கு appeared first on Dinakaran.