தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தியதை கட்டுப்படுத்த புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓட்டுநர்கள் அரசுப் பேருந்துகளை இயக்கும்போது செல்போன் பயன்படுத்தினால், முதற்கட்டமாக 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், பயணிகள் அச்சத்துடனே பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் உறுதியான உத்தரவை அனுப்பி இந்த விதிமுறையை கடைப்பிடிக்கத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் பேருந்தின் ஓட்டுநர் கனகராஜ், பேருந்தை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவில் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத்தொடர்ந்து இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ஓட்டுநர் செல்போன் பயன்படுத்துவது தடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
The post அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்: போக்குவரத்துத்துறை உத்தரவு appeared first on Dinakaran.