முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் புதிய திட்டங்கள் அமல்: 1,303 ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம்

* இந்தியாவிலேயே கல்வி, பொருளாதாரத்தில் விரைந்து முன்னேற்றம் காணும் தமிழ்நாடு

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலம் சார்ந்து புதிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கல்வி, தொழில், பொருளாதாரத்தில் விரைந்து முன்னேற்றம் கண்டு வருவதாக அரசு
தெரிவித்துள்ளது.

ஆதிதிராவிட – பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தின் ஒருபகுதியாக 1303 ஆதிதிராவிட தொழில் முனைவோர்க்கு ரூ.160 கோடி மானியம் உள்ளிட்ட பல எண்ணற்றத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அரசின் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஆதிதிராவிடர் நலனுக்கான எண்ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் விவரம்:

* அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் திட்டம் இது. தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை மானியமாகவும், 65 சதவீதத் தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீதத் தொகையை வட்டி மானியமாகவும் அளிக்கிறது. இத்திட்டத்தில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 ஆதிதிராவிட பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்களான 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை மானியமாகப் பெற்றுள்ளனர்.

* அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
இத் திட்டம் ஆண்டுக்கு ரூ.200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 1687 உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1966 பணிகள் நடைபெற்று வருகின்றன.

* ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம்
ஆதிதிராவிடர் குடியிருப்புகளைக் குடிநீர், சாலைகள், மின்சாரம் முதலிய அடிப்படை வசதிகளைக் கொண்ட தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் ரூபாய் 100 கோடி வீதம் ரூபாய் 200 கோடி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3,082 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* பழங்குடியின பள்ளிகளை சீரமைக்கும் திட்டம்
பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளை மறுசீரமைத்தல் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மறுசீரமைத்திட முதற்கட்டமாக திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளை நவீன முன்மாதிரிப் பள்ளிகளாகவும், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளைத் தேவையின் அடிப்படையில் வாகனவசதி, அறிவுத் திறன் வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ.13 கோடி முதல்வரால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தொழில் முனைவு திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இத்திட்டத்தின்கீழ், தனிநபர் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

* வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்வு
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கு ஏற்றவாறு, 85,000 ரூபாயிலிருந்து 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த தீருதவித் தொகையைக் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாகவும், அதிகபட்சமாக 12 லட்சம் ரூபாயாகவும், மாநில அரசு நிதி மூலம் உயர்த்தி வழங்கிட அரசு ஆணை பிறப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த 317 பேருக்கு வேலைவாய்ப்புகளும், 578 பேருக்கு ஓய்வூதியமும், ஒருவருக்கு இலவச வீட்டுமனையும் வழங்கப்பட்டுள்ளன.

* சமத்துவ கிராமங்கள், சமத்துவ மயானங்கள்
சாதி வேறுபாடுகளற்ற முன்மாதிரி சமத்துவக் கிராமங்களுக்குப் பரிசுகள் சாதி வேறுபாடுகளற்ற முறையில் சமத்துவ மயானங்கள் கொண்டுள்ள கிராமங்களில் 37 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் 37 முன்மாதிரிக் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.70 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 199 முன்மாதிரி கிராமங்களுக்கு ரூ.30.30 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

* புதிரை வண்ணார் நல வாரியம் புதுப்பித்தல்
தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட எழுத்தாளர்களுக்கான கலை, பண்பாடு, இலக்கிய படைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.50ஆயிரம் என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளார்.

* இலவச வீட்டுமனை வழங்குதல்
வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலையினை உயர்த்தும் வகையில் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு 2021க்குப் பின் ரூ.19.30 கோடி மதிப்பீட்டில் 2,861 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

* வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவோருக்கான உதவி திட்டம்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பொறியியல், நிதி, உலக சுகாதாரம், உலகத் தொழில், சட்டம் போன்றவைகளில் முதுகலை படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 64 ஆதிதிராவிட – பழங்குடியின இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.

* ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மேம்பாடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகளும் அறிவியல் ஆய்வுக்கூடங்களும் ரூ.100 கோடி மதிப்பில் 150 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 480 புதிய வகுப்பறைகள் மற்றும் 15 அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 39 அரசு உறைவிடப் பள்ளிகளுக்கு 100 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக் கூடங்கள் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட புதிய விடுதிக் கட்டிடங்களும், விடுதிகளில் பராமரிப்புப் பணிகளும் நடைபெறுகின்றன. விடுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 535 விடுதிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகின்றன.

* வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுதல்
பழங்குடியினர் திட்டத்தின்கீழ் 2,787 வீடுகள் கட்டுவதற்கு ரூ.126.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 500 நரிக்குறவர் மற்றும் 1,000 இதர பழங்குடியினர் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 20 மாவட்டங்களில் ரூ.79 கோடி செலவில் 1,500 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
பழங்குடியினத்தைச் சார்ந்த 146 இளைஞர்களை அடையாளம் கண்டு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு குரூப்ஸ், டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா, முருகப்பா குரூப், சாந்தி கியர்ஸ், எச்டிபி வங்கி மற்றும் குன்-வோக்ஸ்வாகன் போன்ற உயர் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* நரிக்குறவர் மற்றும் இருளர்களுக்கான சிறுவணிக கடன்
26 மாவட்டங்களில் வாழும் 2,024 நரிக்குறவர் பழங்குடியினருக்கும், 178 இருளர் பழங்குடியினருக்கும் ரூ.11.01 கோடி அரசு மானியத்துடன் தேசிய பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.11.01 கோடி சிறுவணிக கடனாக வழங்கப்படவுள்ளது. இப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தனிக் கவனம் செலுத்தி ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலம் சார்ந்து புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றி வருவதால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாழும் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள், குறிப்பாக இளைஞர்கள் கல்வி, தொழில், பொருளாதாரங்களில் விரைந்து முன்னேறி வருகின்றனர்.

* பழங்குடியினருக்கான தொல்குடி திட்டம்
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ஆண்டிற்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் தொல்குடி திட்டம் முதலமைச்சர் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வீடற்ற பழங்குடியினருக்கு 750 வீடுகள் ரூ.40.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. மேலும், இந்நிதியாண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையுடன் இணைந்து வீடற்ற பழங்குடியினருக்காகக் கூடுதலாக 3,594 வீடுகள் கட்டப்படவுள்ளன.

The post முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் புதிய திட்டங்கள் அமல்: 1,303 ஆதிதிராவிட தொழில்முனைவோருக்கு ரூ.160 கோடி மானியம் appeared first on Dinakaran.

Related Stories: