புரோ கபடி தொடர்: பிளே ஆப் சுற்றில் ஜெய்ப்பூர்; வெளியேறியது நடப்பு சாம்பியன்

புனே: புரோ கபடி போட்டியின் நடப்புத் தொடரில் பிளே ஆப் சுற்றில் விளையாட முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 5வது அணியாக முன்னேறி இருக்கிறது. புரோ கபடி போட்டியின் 11வது தொடர் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் சுற்றில் விளையாட முதல் அணியாக அரியானா ஸ்டீலர்ஸ் முன்னேறியது. தொடர்ந்து முன்னாள் சாம்பியன் தபாங் டெல்லி, 3 முறை சாம்பியன் பாட்னா பைரேட்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிப் பெற்றன. பிளே ஆப் சுற்றுக்கு மொத்தம் 6 அணிகள் தேர்வாக வேண்டிய நிலையில் 2 இடங்களுக்கான போட்டியில் 4 அணிகள் இருந்தன.

இந்நிலையில் 123வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 31-28 என்ற புள்ளிகணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்கால் வாரியர்சை வீழ்த்தியது. அதனால் 21 ஆட்டங்களில் விளையாடிய ஜெய்ப்பூர் 12 வெற்றி, 7 தோல்வி, 2 சமன் மூலம் 69 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு 5வது அணியாக முன்னேறியது. தொடர்ந்து நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருந்த நடப்பு சாம்பியன் புனேரி பல்தன், தெலுங்கு டைடன்ஸ் அணிகள் மோதின. அதில் டைடன்ஸ் அணி 48-36 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

தோல்வியடைந்த புனேரி பல்தன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. புனே 21 ஆட்டங்களில் விளையாடி 55 புள்ளிகளுடன் உள்ளது. புனே தனது கடைசி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தினாலும் அது ஆறுதல் வெற்றியாகவே இருக்கும். அதே நேரத்தில் 22 ஆட்டங்களிலும் விளையாடி விட்ட டைடன்ஸ் அணி 66 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளதா என்பது இன்று தெரியும். காரணம் அதே 66 புள்ளிகளுடன் உள்ள யு மும்பா இன்னும் ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டி உள்ளது. அந்த ஆட்டத்தில் இன்று வலுவான அரியானா ஸ்டீலர்சை எதிர்கொள்கிறது.

அதில் வென்றால் 71 புள்ளிகளுடனும், சமன் செய்தால் 69புள்ளிகளுடனும், 7புள்ளிக்கும் குறைவான வித்தியாசத்தில் தோற்றால் 67புள்ளிகளுடன் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். அப்படி மும்பை தோற்றாலும், தெலுங்கு டைடன்சுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு குறைவு. அப்போது இரண்டு அணிகளும் தலா 66 புள்ளிகளுடன் இருக்கும். ஆனால் ஸ்கோர் புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைடன்ஸ் மைனஸ் 40ல் இருக்கிறது. மும்பையின் புள்ளிகள் வித்தியாசம் 24 ஆக இருக்கிறது. ஒருவேளை இன்று அரியானா 65 புள்ளிகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தும் அதிசயம் நிகழ்ந்தால் தெலுங்கு டைடன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறும்.

The post புரோ கபடி தொடர்: பிளே ஆப் சுற்றில் ஜெய்ப்பூர்; வெளியேறியது நடப்பு சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: