புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 26ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கபட்ட உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய எந்த அடிப்படை முகாந்திரத்தையும் காண முடியவில்லை . மேலும் ஏற்கனவே ஜாமீனை ரத்து செய்யக்கோரிய கோரிக்கையுடன் ஒரு இடையீட்டு மனு மீதான விசாரணை இந்த அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. எனவே அதனை அடிப்படையாக கொண்டு ஒய்.பாலாஜியின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
The post ஜாமீன் உத்தரவு மறுஆய்வு அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.