குடியாத்தம், டிச.21: குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் சிறுத்தை தனது குட்டிகளுடன் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே, வனத்துறையினர் டிராப் கேமரா அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தங்களது ஆடு, மாடுகளை அருகில் உள்ள குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூங்குளம் மலைப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு செல்வர். தற்போது அந்த மலைப்பகுதியில் சிறுத்தை தனது குட்டிகளுடன் சுற்றித்திரிந்து வருவதாக கூறப்படுகிறது. அங்கு ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றவர்கள் இதை பார்த்து விட்டு கிராம மக்களிடம் கூறியுள்ளனர். இதனால் வீரிசெட்டிப்பள்ளி கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று பூங்குளம் மலைப்பகுதியில் பாறை மீது ஓய்வெடுத்து கொண்டிருந்த சிறுத்ததாக கூறப்படும் அந்த சிறுத்ைத திடீரென கிராமத்தில் நுழைந்து அங்கிருந்த சேவல் மற்றும் கோழிக்குஞ்சுகளை விரட்டிவிரட்டி கடித்ததாக கூறப்படுகிறது. குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துருவம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் பீதியடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு மலைப்பகுதிக்கு கொண்டு செல்வதில்லை. எனவே, கிராம மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில் தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் வீரிசெட்டிப்பள்ளி பீட் மற்றும் காப்புக்காடு பகுதியில் ரோந்து சென்றனர். மேலும், அங்குள்ள மரங்களில் டிராப் கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
The post பூங்குளம் மலைப்பகுதியில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் சிறுத்தை வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட appeared first on Dinakaran.