மேலும் 5 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் சேகர்பாபு, இன்று கோவை மாவட்டம், ஈச்சனாரி, விநாயகர் திருக்கோயிலில் சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, புதிய திட்டங்கள் மற்றும் சேவைகளையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் 2021-2022 ஆம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்பின்படி, கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக இதுவரை 20 கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது, “கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் தற்போது 20 கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் இவ்வாண்டு மேலும் 5 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சர் சேகர்பாபு, இன்று ஈச்சனாரி, விநாயகர் கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம், முத்தாரம்மன் கோயில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், ஒப்பிலியப்பன் கோயில், திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை, தாயுமானவசுவாமி கோயில் ஆகிய கோயில்களிலும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், இணை ஆணையர் பி.இரமேஷ், துணை ஆணையர் விஜயலட்சுமி. உதவி ஆணையர்கள் என்.நாகராஜ், இந்திரா, கோயில் பரம்பரை அறங்காவலர் அழகு மகேஸ்வரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மேலும் 5 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: