திருவொற்றியூர்: எண்ணூர் அருகே இன்று உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ஹவுரா எஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக தினமும் ஏராளமான விரைவு ரயில் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7.25 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில் எண்ணூர் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எண்ணூர் மற்றும் அத்திப்பட்டு புதுநகருக்கு இடையே, மின்சார ரயில்களுக்கு பயன்படும் உயர் மின் அழுத்த கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது.
இதனால் இவ்வழியாக சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. உடனே ரயில்வே துறை மின்கம்பி தொழில்நுட்ப பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 5 பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லக்கூடிய மின்சார ரயில்கள் அனைத்தும் எண்ணூரிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் எண்ணூர் முதல் சென்ட்ரலுக்கும், மீஞ்சூர் முதல் கும்மிடிப்பூண்டிக்கும் இடையே மட்டும் ரயில் சேவை செயல்பட்டது.
எண்ணூர் முதல் அத்திப்பட்டு வரை ரயில் சேவை முற்றிலுமாக தடைப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மாணவ, மாணவியர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் சிரமப்பட்டனர். அவசர வேலையாக செல்லக்கூடியவர்கள் பேருந்துகள் மூலம் தங்கள் இடத்திற்கு சென்றனர். .சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
The post எண்ணூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி appeared first on Dinakaran.