×

தங்க முதலீட்டு திட்டத்தில் பழனி கோயிலின் 192 கிலோ பலமாற்றுப் பொன் இனங்கள் வங்கியில் முதலீடு

திண்டுக்கல்: தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யும் வகையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் 192 கிலோ 984 கிராம் பலமாற்றுப் பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு ஆகியோர் ஒப்படைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி. உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (20.12.2024) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் செல்வி ஆர்.மாலா அவர்கள் முன்னிலையில் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாட்டில் இல்லாத 192 கிலோ 984 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர்களை சீரமைத்தல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில் திருக்கோயில்களுக்கு வரவேண்டிய நிலுவையிலுள்ள வாடகை மற்றும் குத்தகை தொகையினை வசூலித்தல், திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்து வருவாய் ஈட்டுதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்ட முடிவுகளின்படி திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களை பிரித்தெடுத்து, பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கிட ஏதுவாக தமிழ்நாட்டை மூன்று மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் செல்வி ஆர்.மாலா, க.ரவிச்சந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர் 23 திருக்கோயில்களில் பயன்பாடற்ற பொன் இனங்களை பிரித்து அதில் 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கடந்த வாரம் ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 28 கிலோ 906 கிராமும், திருச்சி மாவட்டம், குணசீலம், அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் 12 கிலோ 595 கிராமும் மும்பையிலுள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கிட பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 192 கிலோ 984 கிராம் எடையுள்ள பயன்பாடற்ற பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 1,000 கிலோ எடை கொண்ட பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது ஆண்டிற்கு ரூ.12 கோடி வட்டித்தொகையாக கிடைப்பதோடு, ரூ.700 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு திருக்கோயில்களில் சொத்து மதிப்பும் உயர்வடைகின்ற அற்புதமான திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரித்துக் கொள்கிறேன்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் பெயரில் 2007 ஆம் ஆண்டு 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1.35 கோடி வட்டித்தொகையாக கிடைக்கப்பெற்று வருகிறது. இத்திருக்கோயிலிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட திருக்கோயில் அறங்காவலர்குழு தீர்மானத்தின்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வரப்பெற்றவுடன் நேர்காணல் நடத்தி எவ்வித தவறுக்கும் இடம் கொடாமல் தேர்வு செய்திட வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேர்காணல் நடத்தப்பட்டு வருகின்ற மார்ச் மாத இறுதிக்குள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

பழனி திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக்கிற்கு பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஏற்கனவே தேர்வுசெய்யும் போது இந்து சமய அறநிலையத்துறையின் கல்விப் பிரிவின் விதிமுறைகளுக்குட்பட்டு தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆகவே அவர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாத நிலையில்தான் அவர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியுள்ளோம்.

திருக்கோயில் யானைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வனத்துறையின் மூலமாக அவ்வபோது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, கால்நடை மருத்துவர்களால் அறிவுறுத்தப்படும் உணவு கட்டுப்பாடும் கடைபிடிக்கப்படுகிறது. மாண்புமி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி, 26 திருக்கோயில்களிலுள்ள 28 யானைகளை நல்ல முறையில் பராமரித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்திய வனத்துறை பாதுகாப்பு சட்டப்படி, புதிதாக யானையை வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை. முறையான அனைத்து அனுமதிகளையும் பெற்று தனது சொந்த பராமரிப்பில் யானைகளை வளர்த்து வருபவர்கள் திருக்கோயிலுக்கு யானையினை வழங்க முன்வந்தால் சட்டப்படி அதனை ஏற்றுக்கொள்வதற்கு துறை தயாராகவுள்ளது. அவை யானைகள் இல்லாத திருக்கோயில்களுக்கு வழங்கப்படும்.

பழனி திருக்கோயிலுக்கு புதிய ரோப்கார் அமைப்பது தொடர்பாக அறங்காவலர் குழு மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு இயக்கப்படும் ரோப்கார் கட்டமைப்புகளை ஆய்வு செய்து வந்துள்ளனர். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு முதலமைச்சர் அவர்களின் அனுமதி பெற்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், பழனி சார் ஆட்சியர் எஸ்.கிஷன் குமார், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், ந.திருமகள், இணை ஆணையர்கள் கோ.செ.மங்கயர்க்கரசி, இரா.வான்மதி, எஸ்.மாரிமுத்து, எம்.கார்த்தி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

The post தங்க முதலீட்டு திட்டத்தில் பழனி கோயிலின் 192 கிலோ பலமாற்றுப் பொன் இனங்கள் வங்கியில் முதலீடு appeared first on Dinakaran.

Tags : Palani Temple ,Chakarapani ,Shekarbabu ,Palani Arulmigu Dandayudapani Swami Temple ,State Bank of India ,Chief Minister ,Tamil Nadu ,K. Stalin ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் தனியார் மருத்துவமனை...