மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலின் அறங்காவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலின் அறங்காவலர்களின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளாக மாற்றியமைக்க கோரி நீட்டிக்கக்கோரி பாலசுந்தரம் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 19.12.2024 அன்று நீதியரசர் எஸ்.எஸ்.சவுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் 1933 நிர்வாகத்திட்டத்தின்படி இத்திருக்கோயில் விலக்களிக்கப்பட்ட திருக்கோயில் (Excepted) மற்றும் இது ஒரு சமயக்கிளைச்சார்ந்த (Denomination Temple) திருக்கோயில் என்ற வாதத்தினை முன்வைத்தார். மேலும், 1968-ன் நிர்வாகத்திட்டத்தின்படி அறங்காவலர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்று இருப்பதால், தற்போது அறநிலையத்துறையில் வெளியிடப்பட்ட அரசாணையில் அறங்காவலர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் என்று உள்ளதை 3 ஆண்டுகளாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

துறைசார்பாக அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959, சட்டப்பிரிவு 47-ன்படி அறங்காவலர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்று உள்ளது. மேலும், சட்டப்பிரிவு 50-ன்படி நிர்வாகத்திட்டத்திற்கும், அறநிலையத்துறை சட்டத்திற்கும் ஏதாவது முரண்பாடு இருப்பின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவில் கூறியுள்ள கூற்றுகளே பொருந்தும் என்று வாதம் செய்தார். மேற்கண்ட வாதத்தினை ஏற்றுக்கொண்டு மாண்பமை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலின் அறங்காவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: