குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலத்தை முதல்வர் டிச.30ல் திறந்து வைக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலத்தை டிச.30ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டம் வரும் 30, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை பார்வையிட அமைச்சர் எ.வ.வேலு நேற்று கன்னியாகுமரி வந்தார். வெள்ளிவிழா பொதுக்கூட்டத்திற்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி, திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பால பணிகளை ஆய்வு செய்தார்.

இதையடுத்து, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடந்தது. இதில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25வது ஆண்டு வெள்ளிவிழாவை உலக தமிழர்கள் போற்றும் வகையில் சிறப்பாக நடத்த கூறியுள்ளார்.

இதற்கு ஒருங்கிணைப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயனை நியமித்துள்ளார். டிச.29ம் தேதி தூத்துக்குடிக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு, 30ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு மாலையில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இணைக்கும் பாலத்தை திறந்து வைக்கிறார். லேசர் அலங்கார விளக்குகளை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். மறுநாள் காலை திருவள்ளுவர் படக்காட்சியை பார்வையிடுகிறார். பின்னர் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* வாகனங்கள் நுழைவு கட்டணம் ஜன.2 வரை விலக்கு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி இன்று(20ம் தேதி) முதல் ஜன.2ம் தேதி வரை கன்னியாகுமரி சீரோ பாயின்ட், சன்செட் பாயின்ட், விவேகானந்தபுரம், கோவளம் ஆகிய பகுதிகள் மற்றும் பிற பகுதிகளுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

The post குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி பாலத்தை முதல்வர் டிச.30ல் திறந்து வைக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: