திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாகும்: திருப்பூரில் துணை முதல்வர் பெருமிதம்

திருப்பூர்: திராவிட மாடல் அரசு என்றைக்கும் மக்களுக்கான அரசாகும் என திருப்பூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.311 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 38 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: திராவிட மாடல் அரசு நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான அரசு என்றைக்கும் மக்களுக்கான அரசாகும். உங்களுக்காக குறிப்பாக தாய்மார்களுக்கான, பெண்களுக்கான அரசாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். ஏனென்றால், நமது முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்தே உங்களுக்கான கையெழுத்துதான். அதுதான் மகளிருக்கான விடியல் பயணத் திட்டம்.

தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி மற்றும் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கடந்த செப்டம்பர் முதல் இன்று வரை ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் அரசுதான் திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இருந்து திருப்பூருக்கு நேற்று காரில் வந்தார். அவருக்கு அவினாசியில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் பிறந்தநாளையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெரியார், அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் தெற்கு மாநகர திமுக இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட தெற்கு சட்டமன்ற கலைஞர் நூலகத்தை திருப்பூர் ஏ.பி.டி. ரோடு கருவம்பாளையம் சூர்யாநகரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருப்பூர் ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த அனைத்து அரசு துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி,பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

The post திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாகும்: திருப்பூரில் துணை முதல்வர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: