அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்து கண்டிக்கத்தக்கது: மேயர் பிரியா பேட்டி

பெரம்பூர்: இந்தியாவில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை கிடைக்க செய்த அம்பேத்கர் பற்றி ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது என சென்னை மேயர் பிரியா கூறினார். அம்பேத்கரை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் பல இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ஓட்டேரி குக்ஸ் சாலை மேம்பாலம் அருகே மேயர் பிரியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.பிற்போக்கு மனப்பான்மையுடன் செயல்படக்கூடிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.

இதில், பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் உள்பட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதை தொடர்ந்து, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எல்லோருக்குமான அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் வேளையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இதுபோன்ற கருத்தை தெரிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இன்றைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்குமான அங்கீகாரத்தை கொடுத்தவர்தான் அம்பேத்கர். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை பற்றி தெரிவித்து இருக்க கூடிய கருத்து மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

* ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருவிக நகர் பேருந்து நிலையம் அருகே, திமுக பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சந்துரு, வர்த்தக அணி அமைப்பாளர் துரைக்கண்ணன், இளைஞர் அணியை சேர்ந்த தனசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், பெரவள்ளூர் சதுக்கம் அருகே பகுதி செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பட்டாளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

* திருவொற்றியூர் தொகுதி திமுக சார்பில், கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் தி.மு.தனியரசு, அருள்தாசன், ஏ.வி.ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன், இளைஞர் அணி அமைப்பாளர் மதன்குமார், வர்த்தக அணி அமைப்பாளர் தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post அம்பேத்கர் பற்றிய அமித்ஷாவின் கருத்து கண்டிக்கத்தக்கது: மேயர் பிரியா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: