அம்பேத்கரை அவமதித்தது பாஜகதான்.. ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை; அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: கார்கே பேட்டி!

டெல்லி: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்., திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்;

நிகழ்ந்த சம்பவம் பற்றி பேசும் முன் உண்மை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய அனைத்தும் பொய் என கார்கே கூறினார். பாஜக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். மற்ற கட்சி எம்.பி.க்களை தாக்குவதற்காக நாடாளுமன்றத்துக்கு – ராகுல் வந்துள்ளாரா? என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைதியான முறையில்தான் நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவை நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். அம்பேத்கரை அவமதித்தது பாஜகதான் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார். அம்பேத்கரை அவமதித்து பேசியதால்தான் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோருகிறோம் என்றார். பாஜக எம்.பி.க்கள் எங்களை தாக்கி தள்ளிவிட்டனர் என்று மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது தங்களை பாஜக எம்.பி.க்கள் தாக்கியதாக கார்கே புகார் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நுழைய விடாமல் காங்கிரஸ் எம்.பி.க்களை பாஜக எம்.பி.க்கள் தடுத்தனர். பாஜகவின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.க்களை பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டனர். ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி.க்கள் தள்ளிவிட்டதில் எனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.க்கள் எங்களை தடுத்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; நாடாளுமன்றத்துக்குள் செல்ல விடாமல் பாஜக
எம்.பி.க்கள் தங்களை தடுத்தனர். அம்பேத்கரை அமித்ஷா அவமதித்த சம்பவத்தை பாஜக திசை திருப்ப முயற்சிகிறது. பாஜக அரசியல் சட்டத்துக்கும் எதிரி, அம்பேத்கருக்கும் எதிரி என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

அம்பேத்கர், அதானி விவகாரத்தை திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாகவும், அதானி மீதான புகாரில் விசாரணை கோரினால், அவையில் அமளியில் ஈடுபட்டு பாஜகவினர் திசை திருப்புகின்றனர் என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தனர். பாஜக எம்.பி.க்கள் தடியுடன் நாடாளுமன்றத்துக்கு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா பதவி விலகியே தீர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

The post அம்பேத்கரை அவமதித்தது பாஜகதான்.. ராகுல் காந்தி யாரையும் தள்ளிவிடவில்லை; அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: கார்கே பேட்டி! appeared first on Dinakaran.

Related Stories: