ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே, ஜெலட்டின் குச்சிகள் வெடித்துச் சிதறியதில் கார் சர்வீஸ் சென்டரில் தீப்பிடித்து, அங்கு நிறுத்தியிருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள கார்கள், டூவீலர்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் ரூபன். இவர், அதே பகுதியில் தனக்கு சொந்தமான செட்டில் கார் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவற்றின் ஒரு பகுதியை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த முஸ்தாக் (25) என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அவர், அந்த இடத்தில் பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை இருப்பு வைத்து விற்பனை செய்து வந்தார். நேற்றிரவு கார் சர்வீஸ் சென்டரில் வேலை முடிந்தபின் அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் செட்டில் இருந்த ஜெலட்டின் குச்சிகள் திடீரென வெடித்து சிதறின. இதில், கார் சர்வீஸ் சென்டர் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. இதில், சர்வீஸூக்காக நிறுத்தியிருந்த சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான கார்கள், டூவீலர்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே தீ விபத்தின்போது செட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ரியாஸ் (25) என்ற வாலிபர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியதில் கார் சர்வீஸ் சென்டரில் பயங்கர தீ: ரூ.40 லட்சம் வாகனங்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.