சென்னை வழியாக செல்லும் மதுரை – பினாங் விமான சேவை நாளை தொடக்கம்

சென்னை, டிச. 19: மதுரை விமான நிலையத்தில் கடந்த அக்.1 முதல் 24 மணி நேர சேவை துவக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரையிலிருந்து சென்னை வழியாக மலேசியாவின் பினாங் நகருக்கு நாளை (டிச.20) முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்படி தினமும் மதுரையிலிருந்து இரவு 10.45 மணிக்கு புறப்படும் தனியார் விமானம், மறுநாள் அதிகாலை 12.05 மணிக்கு சென்னை செல்லும். பின்னர் அங்கிருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வழங்கப்படும். சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் உடைமைகள் உள்ளிட்டவற்றை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். இதையடுத்து இந்த விமானம் அதிகாலை 2.15 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மலேசியாவின் பினாங் நகருக்கு அந்நாட்டு நேரப்படி காலை 8.30 மணிக்கு சென்றடையும். பின்னர் மறுமார்க்கமாக அங்கிருந்து அந்நாட்டு நேரப்படி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு இந்திய நேரப்படி காலை 10.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

பின்னர் மதுரை வரும் பயணிகளுக்காக சுங்க சோதனை முடிக்கப்பட்டு, பிற்பகல் 1.55 மணிக்கு புறப்பட்டு 3.05 மணிக்கு மதுரை வந்தடையும். மதுரை – பினாங் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகள், 30 கிலோ வரை லக்கேஜ் பிரிவிலும், 7 கிலோ வரை கைகளிலும் உடைமைகளை கொண்டு செல்லலாம் என, தனியார் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை மூலம் மதுரை விமான நிலையத்தில் இரவு நேர பயணிகள் சேவை அமலுக்கு வருகிறது. இதேபோல் மதுரை விமான நிலையத்தில் இருந்து இணைப்பு சேவை மூலம் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக மதுரை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. விரிவாக்க பணிகளுக்கு பின், மதுரையில் இருந்து நேரடியாக பல நாடுகளுக்கும் விமான சேவை தொடங்கலாம் என தெரிகிறது.

The post சென்னை வழியாக செல்லும் மதுரை – பினாங் விமான சேவை நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: