மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் இருந்து வௌியேறாது: பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு

ஜெருசலேம்: இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிரியாவில் மாற்று ஏற்பாடு செய்யும் வரையிலும், ஆக்கிரமித்த பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். சிரியாவில் போராளிகள் படையால் அந்நாட்டு அதிபர் ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்த பிறகு, கோலன் ஹைட்சை ஒட்டி சிரியாவில் உள்ள இடையகப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தது. அங்குள்ள உயரமான ஹெர்மன் மலைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. சிரியாவில் ஏற்பட்ட சூழலை தனக்கு சாதகமாக்கி இஸ்ரேல் தனது எல்லையை விரிவாக்கம் செய்யப் பார்ப்பதாக எகிப்து உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனாலும், கோலன் ஹைட்ஸ் பகுதியில் குடியிருப்புகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு கடந்த வாரம் ஒப்புதல் அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று முன்தினம் சர்ச்சைக்குரிய இடையகப் பகுதியில் உள்ள ஹெர்மன் மலை உச்சிக்கு வந்தார். இஸ்ரேல் பிரதமர் ஒருவர் சிரியாவிற்கு காலடி எடுத்து வைப்பது இதுவே முதல். அங்கு வந்த நெதன்யாகு, 53 ஆண்டுக்கு முன் இதே மலை உச்சியில் ராணுவ வீரராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறினார். மேலும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாற்று ஏற்பாடு செய்யும் வரை இடையகப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நீடிக்கும், வெளியேறாது என அறிவித்துள்ளார். இந்த மலை உச்சியில் இருந்து இஸ்ரேலின் வடக்கு பகுதியை கண்காணிக்க முடியும் என்பதால் இந்த இடத்திற்கு இஸ்ரேல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

The post மாற்று ஏற்பாடு செய்யும் வரை இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் இருந்து வௌியேறாது: பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: