இந்தியாவின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்: சாதனை நாயகன் அஷ்வின் ஓய்வு

பிரிஸ்பேன்: இந்தியாவின் அதிரடி கிரிக்கெட் நட்சத்திரம் ஆல் ரவுண்டர் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் அஷ்வின்(38). சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2010ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார். அந்த ஆட்டத்தில் 32 பந்துகளில் 38ரன் விளாசியதுடன், சிக்கனமாக பந்து வீசி 2 விக்கெட் கைப்பற்றினார். அதனால் ஆல் ரவுண்டராக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவுக்காக டெல்லி பெரஷ் கோட்லா அரங்கில் களமிறங்கினார் அஷ்வின். அந்த முதல் ஆட்டத்திலேயே 9 விக்கெட்டுகள் அள்ளி ஆட்ட நாயகனாகவும் தேர்வு ஆனார்.

புதிய முயற்சிகளை கையாண்டு எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொள்வதில் ஆர்வம் மிக்கவர் அஷ்வின். ஏதாவது ஒரு ஆட்டத்தில் தடுமாறினாலும், அடுத்த ஆட்டத்தில் மீண்டு வந்து மிரட்டும் வேகம் கொண்டவர். அணியின் கேப்டன், தலைமை பயிற்சியாளர்களின் ‘உள்ளே-வெளியே’அரசியலால், திறமை இருந்தும் அஷ்வினுக்கு அவ்வப்போது வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அதனை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும், இந்தியா முன்னாள் வீரர்கள் சிலரும் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் டெஸ்ட் தொடர்களில் மட்டுமே அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி 537 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அதனால் அஷ்வின் உலக அளவில் 7வது இடத்திலும், இந்திய அளவில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்) அடுத்து 2வது இடத்திலும் உள்ளார். இந்நிலையில், பிரிஸ்பேனில் நேற்று 3வது டெஸ்ட் டிராவான உடன், அஷ்வின் திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதனால் அவரது 14 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. எனினும் அவர் ஐபிஎல், கவுன்டி, பிக்பாஷ் என உள்நாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளார். ஐபிஎல் தொடரில் இப்போது சென்னை அணிக்காக ஏலத்தில் ரூ.9.75கோடிக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

* மறக்க முடியாத நாட்கள் அஷ்வின் கூறியதாவது:
இந்திய அணியின் வீரராக இது எனக்கு கடைசி ஆண்டு. ஒரு கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். எனினும், அதனை உள்ளூர் லீக், கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்துவேன். எனினும் சர்வதேச கிரிக்கெட்டில் இதுதான் என் கடைசி நாள். இந்திய அணியில் விளையாடிய நாட்கள் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியானவை. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சக இந்திய வீரர்களுடன் விளையாடிய நாட்கள் என்றும் நினைவில் நிற்கும்.

6 சதங்கள்… 537 விக்கெட்டுகள்!
* இந்தியாவுக்காக 106 டெஸ்ட்களில் விளையாடி 6 சதங்கள், 14 அரை சதங்கள் உட்பட 3503 ரன் குவித்துள்ளார்.
* டெஸ்ட்களில் 537 விக்கெட்களை அள்ளி உள்ளார். அதே போல் 116 ஒரு நாள் ஆட்டங்களில் 156 விக்கெட்களும், 65 டி20 ஆட்டங்களில் 72 விக்கெட்களும் எடுத்துள்ளார்.
* டெஸ்ட் ஆட்டங்களில் 37 முறை ஐந்து விக்கெட்களை அறுவடை செய்து இருக்கிறார். இப்படி சாதித்தவர்கள் பட்டியலில் உலகளவில் அஷ்வின் 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் ஆஸியின் ஷேன் வார்னே இருக்கிறார்.
* இன்றும் டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான ஐசிசி உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் அஷ்வின் இருக்கிறார். அதேபோல் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் நீடிக்கிறார்.
* இந்தியாவுக்காக 100டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடிய 14 வீரர்கள் பட்டியலில் அஷ்வின் 106 டெஸ்ட்களில் விளையாடி 10வது இடத்தில் இருக்கிறார்.
* டெஸ்ட் தொடர்களில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இலங்கை வீரர் முத்தையா முரளிதரனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஷ்வின். இருவரும் தலா 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.
* இந்தியாவுக்காக ஒரே டெஸ்ட்டில் சதம், 5 விக்கெட் சாதனையை 4 முறை செய்துள்ளார். இந்தப்பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வீரர் அயன் லாதம் (5முறை) முதல் இடத்திலும், அஷ்வின் 2வது இடத்திலும் உள்ளனர்.
* நட்டு என்கிற நடராஜன், ஜட்டு என்கிற ஜடேஜா உள்ளிட்ட சக வீரர்களால் ‘அஷ் அண்ணா ’ என்று அன்பு அழைக்கப்படுபவர் அஷ்வின்.
* இந்தியா 2011ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன் டிராபி வென்ற அணிகளில் அஷ்வினும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
* இந்தியாவில் 2023ல் நடந்த ஒருநாள் உலக கோப்பை தொடரிலும் அஷ்வின் விளையாடினார். அதில் இந்தியா இறுதி ஆட்டம் வரை முன்னேறியது.

The post இந்தியாவின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்: சாதனை நாயகன் அஷ்வின் ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: