ஆஸியிடம் தோல்வியில் நனைவதை தடுக்க குடை கொடுத்த மழை: 3வது டெஸ்டில் தப்பித்த இந்தியா

பிரிஸ்பேன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட்டின் கடைசி நாளில் மழை குறுக்கிட்டதால் டிரா ஆனது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருந்தன. இந்நிலையில் 3வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 445 ரன் குவித்தது. பின் ஆடிய இந்தியா 4ம் நாள் ஆட்ட முடிவில், முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்தது. இந்நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை பும்ரா, ஆகாஷ் ஜோடி தொடர்ந்தது. ஸ்கோர் 260 ஆனபோது, கடைசி விக்கெட்டாக ஆகாஷ் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து 185 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி வேகமாக ரன் குவித்து இந்தியாவை வீழ்த்த திட்டமிட்டது. அதனால் விக்கெட்கள் மளமளவென சரிந்தன. எனினும் 18 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து ஆஸி டிக்ளேர் செய்தது. அதனால் ஆஸி 274 ரன் முன்னிலை பெற்றது. தொடர்ந்து 54 ஓவரில் 275 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்தியா பிற்பகலில் விளையாட ஆரம்பித்தது. தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், ராகுல் தலா 4 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்தியா 2.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தது. அதன் பிறகு மழை நிற்காது என்பது தெரிந்ததால், இரு தரப்பும் 3வது டெஸ்ட்டை சமனில் முடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டனர். மழை குறுக்கீடு செய்ததால் இந்தியாவை வீழ்த்த ஆஸி போட்ட திட்டங்கள் தவிடுபொடியாகின. போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.

The post ஆஸியிடம் தோல்வியில் நனைவதை தடுக்க குடை கொடுத்த மழை: 3வது டெஸ்டில் தப்பித்த இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: