குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட வாழைத் தோப்பு திட்டப்பகுதியினை பார்வையிட்டு பின்னர் பேசுகையில் தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கலைஞரால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது,
அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி முதலமைச்சர் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வாழைத் தோப்பு திட்டப்பகுதி 1970 ஆம் ஆண்டு 310 சதுர அடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் கட்டப்பட்ட 448 குடியிருப்புகள் சிதிலமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருந்தது. அப்பழைய குடியிருப்புகளை அகற்றி 410 சதுர அடி கொண்ட வாழைத் தோப்பு திட்டப்பகுதி 8 கட்டிட தொகுப்புகள் தரை மற்றும் 5 தளங்களுடன், 76 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 504 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இத்திட்டப்பகுதியில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, சிறுவர் பூங்கா, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு , தெரு விளக்குகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பயனாளிகளுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட இடியும் தருவாயில் உள்ள பழைய குடியிருப்புகளை கணக்கெடுக்கும் படி உத்தரவிட்டார்கள்.
அதன்படி சென்னையில் 27,138 வீடுகளும் மற்றும் பிற மாவட்டங்களில் 3,354 வீடுகளும் மொத்தம் 30,492 பழைய வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி , வாரிய தலைமை பொறியாளர் சு.லால் பகதூர், மேற்பார்வை பொறியாளர் (கூ.பொ) த.இளம்பரிதி, நிர்வாகப் பொறியாளர் பி.லலிதா, மாமன்ற உறுப்பினர் எம்.ஸ்ரீதரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ரூ.76.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 504 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.