மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்குகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை ஈரோட்டில் வழங்க உள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை வாழைத்தோப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை பகுதியில் இருக்கும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில் மின்சார வாரியத்தின் சார்பில் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தனித்தனி மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணிகளை 10 நாட்களில் முடித்து தருவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் முதல் வாரம் பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகள் குலுக்கல் முறையில் நடைபெறவிருக்கிறது. இப்பணிகள் முடிவுற்ற பிறகு, பொங்கல் திருநாளையொட்டி, நானும் அமைச்சர் அவர்களும் இக்குடியிருப்பில் புதுமனை புகுவிழா பொதுமக்களோடு சேர்ந்து நடத்தவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிஏஜி அறிக்கையில் கடந்த கால ஆட்சியில் தரமற்ற மருந்துகள் இருந்ததும், 30சதவீதம் மருத்துவப் பணியாளர்கள் காலிப்பணியிடம் இருந்ததால் மருத்துவ சேவையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்துறை உயரலுவலர்களுடன் இதுசம்பந்தமாக கலந்து பேசியிருக்கிறேன். அந்த சிஏஜி அறிக்கையில் என்னெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ, கடந்த கால ஆட்சியில் எந்தமாதிரியான குற்றங்கள் சொல்லப்பட்டிருக்கிறதோ, அக்குறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தி இது சம்பந்தமாக துறை ரீதியான நடவடிக்கைகளுக்கோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கோ துறையின் சார்பில் பரிந்துரை செய்ய உள்ளோம்.

அடுத்த வாரம் துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த கால ஆட்சியில் சிஏஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மேல்நடவடிக்கையாக அரசிற்கு பரிந்து செய்ய உள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோட்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சியம் ஒரு கோடி பயனாளி இருக்க வேண்டும் என்பது, தற்போது அது இரட்டிப்பாகி 2 கோடியே பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் 2 கோடியாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்குகிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: