இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கு, பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கிடவும் கடலூர் மாவட்டம் வேப்பூர், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆகிய 10 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 111 கோடி ரூபாய் செலவில் துவங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் இன்று துவக்கி வைக்கப்பட்டன. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கமுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு இத்தொழிற்பயிற்சி நிலையத்தை இன்று (18.12.2024) துவக்கி வைத்தார்.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலமாக 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் தொழில் 4.0 தொழிற்பிரிவுகளான அட்வாண்ஸ்டு சி.என்.சி (Advanced CNC), மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கள் (Mechanic Electric Vehicle), இண்டஸ்ட்டிரியல் ரோபோட்டிக்ஸ் & டிஜிட்டல் மேனுஃபேக்சரிங் டெக்னீசியன் (Industrial Robotics & Digital Manufacturing Technician), மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் & ஆட்டோமேஷன் (Manufacturing Process Control & Automation), நவீன கால தொழிற்பிரிவுகளான விண்ட் பிளான்ட் டெக்னீசியன் (Wind Plant Technician), எலக்ட்ரீசியன் பவர் டிஸ்ரிபியூஷன் (Electrician Power Distribution), சென்டரல் ஏர் கண்டிஷன் பிளாண்ட் மெக்கானிக் (Central Air Condition Plant Mechanic), ஏரோநாட்டிகல் பிட்டர் (Aeronautical Fitter) மற்றும் ஹெல்த் சானிட்டரி இன்ஸ்பெக்டர் (Health Sanitary Inspector) ஆகிய தொழிற்பிரிவுகளிலும், 8 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் வெல்டர் (Welder), பிளம்பர் (Plumber), டிரஸ் மேக்கிங் (Dress Making) ஆகிய தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதன் மூலம் இந்த ஆண்டில் 1192 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயன் பெறுவர்.
இவ்விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ. வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் பா. விஷ்ணு சந்திரன், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மற்ற இடங்களிலும் நடைபெற்ற துவக்க விழாவில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கமுதியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் சி.வெ. கணேசன் appeared first on Dinakaran.