பெரம்பலூர், டிச.18: பகலில் அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்தும்படி பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தில், பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான, சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி, உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம், பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களைக்கொண்டு, மின் ஆற்றலை தயாரிக்கும் பொழுது ஏற்படும் மாசுபாட்டின் அளவினைகுறைத்திடவும், நமது நாட்டினை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேறிடும் நோக்கில்,
பகலில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெறப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதால், பகலில் சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரத்தை பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த, அனைத்து விவசாயிகளும் இயன்றவரை தங்களது விவசாய மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார்.
The post சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த பகல் நேரங்களில் உபயோகப்படுத்தும்படி பொறியாளர் வலியுறுத்தல் appeared first on Dinakaran.