புழல்: காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், புழல் ஏரியிலிருந்து கடந்த 4 நாட்களாக 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், புழல் ஏரிக்கு 150 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முற்றிலுமாக குறைந்தது.
இதனால், கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் 1000 கன அடியில் இருந்து தற்போது 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், தற்போது நீர் இருப்பு 2761 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.75 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று கலக்கிறது.
செங்குன்றம் சாமியார் மடம், வடகரை பாபா நகர் கிராண்டலைன், தண்டல் காலனி, கிருஷ்ணா நகர் புழல் திருநீலகண்டனகர், தமிழன் நகர், மேக்ரோ மார்வெல் நகர், பாலாஜி நகர் வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூர், சடையாங்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்கிறது. இதனால், உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
The post புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.