மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் பரபரப்பு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதாவை தாக்கல் செய்வதற்காக அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 3ல் 2 பங்கு பலம் கிடைக்காததால் ஆளும்தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, மசோதா மீது விசாரணை நடத்த, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும், யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் மசோதாக்களுக்கு ஒன்றிய அமைச்சரவை கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், அரசியலமைப்பு 129வது சட்ட திருத்தம் மற்றும் யூனியன் பிரதேசம் சட்ட திருத்த மசோதாக்களை மக்களவையில் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்தது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் செலவுகள் குறைவதோடு, தேர்தல் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது தடுக்கப்படும், வளர்ச்சித் திட்டப் பணிகளும் தொய்வின்றி நடைபெறும் என ஒன்றிய அரசு கூறுகிறது.

ஆனால் இந்த திட்டம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும், சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதனால் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் அறிவித்திருந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கான 2 மசோதாக்களை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதாக்களை தாக்கல் செய்யவே கூடாது என எதிர்க்கட்சிகள் தொடக்கத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல். இந்த மசோதாவை பரிசீலிப்பது இந்த அவையின் சட்ட திறனுக்கு அப்பாற்பட்டது. அதைத் திரும்பப் பெறுமாறு அரசை வலியுறுத்துகிறோம்’’ என்றார். சமாஜ்வாடி எம்பி தர்மேந்திர யாதவ், ‘‘ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜ அறிமுகப்படுத்தியிருப்பது நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வருவதற்கான முயற்சி’’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ‘‘இந்த மசோதாக்கள் சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை மக்களவையுடன் இணைத்து, மக்களின் ஆணையை மதிப்பிழக்கச் செய்கிறது. மாநில அரசு என்பது ஒன்றிய அரசுக்கோ, நாடாளுமன்றத்திற்கோ கீழானது அல்ல. எனவே, இது தேர்தல் சீர்திருத்தம் அல்ல. ஒரு தனி மனிதனின் ஆசை மற்றும் கனவை நிறைவேற்றுவதற்கானது’’ என்றார்.

திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை தேர்ந்தெடுக்க வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் மூலம் இந்த உரிமையை குறைக்க முடியாது’’ என்றார். இந்த மசோதா சுயாட்சி உரிமையை மீறுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி குற்றம்சாட்டினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களுக்கு முழுமையான ஆதரவு தருவதாக பாஜ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், சிவசேனா கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டனர்.

மசோதாவை தாக்கல் செய்த சட்ட அமைச்சர் மேக்வால், ‘‘எதிர்க்கட்சிகள் கூறுவது போல இந்த மசோதாக்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை தாக்கவில்லை. எந்த கோட்பாடுகளையும் மாற்றவில்லை. இந்த மசோதா குறித்து விரிவான ஆய்வு நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என சபாநாயகரிடம் வலியுறுத்தினார். சுமார் 90 நிமிட விவாதத்திற்குப் பிறகு, இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தி தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதன் பேரில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இதில், மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 198 வாக்குகளும் பதிவானதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதைத் தொடர்ந்து முறைப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘அரசியலமைப்பை மாற்ற கோரும் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என பிரதமர் மோடி முன்னதாகவே விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனவே இதை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப அரசு தயாராக இருக்கிறது. கூட்டுக்குழுவில் அனைத்து விவாதங்களும் நடக்கும். அதன் அறிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் விவாதங்கள் நடைபெறும்’’ என உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இந்த மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு முன்மொழிவதாக சபாநாயகரிடம் தெரிவித்தார். உடனடியாக, மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளது.

மசோதா தாக்கலுக்கான ஓட்டெடுப்பின் போது 461 எம்பிக்களே அவையில் இருந்தனர். இதில் 3ல் 2 பங்கு என்பது 307 எம்பிக்கள். ஆனால் பாஜவுக்கு வெறும் 269 வாக்குகளே கிடைத்தன. மசோதாவை தாக்கல் செய்ய சாதாரண பெரும்பான்மை பலம் போதும். ஆனால் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமெனில் மக்களவையில் 3ல் 2 பங்கு பலம் கட்டாயம் வேண்டும். எனவே, இத்தகைய பலம் பாஜ கூட்டணிக்கு இல்லாதது, மசோதா தாக்கலின் போதே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இது ஆளும் தரப்பை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

* போதிய பலமில்லாததால் நிறைவேற வாய்ப்பில்லை
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பாஜ கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால் மக்களவையில் அது நிறைவேற வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சசிதரூர், மாணிக்கம் தாகூர் ஆகியோர் கூறி உள்ளனர். மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இதில் 3ல் 2 பங்கு என்பது 362 எம்பிக்கள். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்றாலும், மசோதாவை நிறைவேற்ற கூடுதலாக 69 வாக்குகள் தேவை. இந்தியா கூட்டணிக்கு 238 எம்பிக்கள் உள்ளனர். இரு கூட்டணியிலும் இல்லாத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகியவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்துள்ளன. ஆனால் ஒய்எஸ்ஆருக்கு 4, எஸ்ஏடிக்கு 1 எம்பிக்களே உள்ளனர். எப்படி பார்த்தாலும் இன்னும் 64 எம்பிக்களுக்கு எங்கே போவது? எனவே மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, ஜனநாயக முறைப்படி நிறைவேற வாய்ப்பில்லை.

* 20 எம்பிக்களுக்கு பாஜ நோட்டீஸ்
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பாஜ கட்சியின் அனைத்து எம்பிக்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி 20 எம்பிக்கள் நேற்று அவைக்கு வரவில்லை. அவர்களுக்கு விளக்கம் கேட்டு பாஜ நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கலுக்கான ஓட்டெடுப்பின் போது 461 எம்பிக்களே அவையில் இருந்தனர். இதில் 3ல் 2 பங்கு என்பது 307 எம்பிக்கள். ஆனால் பாஜவுக்கு வெறும் 269 வாக்குகளே கிடைத்தன.
* மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இதில் 3ல் 2 பங்கு என்பது 362 எம்பிக்கள். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்கள் உள்ளனர்.
* ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் ஆகியவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்துள்ளன. ஆனால் ஒய்எஸ்ஆருக்கு 4, எஸ்ஏடிக்கு 1 எம்பிக்களே உள்ளனர். மசோதா நிறைவேற இன்னும் 64 எம்பிக்கள் ஆதரவு தேவை.

* அரசியலமைப்பிற்கு எதிரானது: பிரியங்கா
நாடாளுமன்றத்தில் நேற்று பேட்டி அளித்த வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது. நமது தேசத்தின் கூட்டாட்சிக்கு எதிரானது. நாங்கள் இந்த மசோதாவை எதிர்ப்போம்’’ என்றார்.

* தேர்தலுக்கு முடிவு கட்டுவதே நோக்கம்
பெலகாவியில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தலே இல்லாமல் செய்வதுதான். அதுதான் பாஜவின் நோக்கம். எப்போதுமே அவர்களுக்கு ஜனநாயக நடைமுறை என்பது பிடிக்காது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறை சாத்தியமற்றது. இது நிச்சயம் மக்களவையில் நிறைவேறாது’’ என்றார். இது முக்கிய பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் பாஜவின் உத்தி என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

* அதிபர் ஆட்சியின் தொடக்கம்; கனிமொழி எம்பி
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் அனைவராலும் எதிர்க்கப்பட்ட மசோதாவை பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது. பாஜ கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த மசோதா மாநில அரசின் உரிமையை பறித்து விடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலைக்க கூடிய அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கக்கூடிய மசோதாவாக இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மசோதா சட்டமாக வந்தால் மாநில கட்சிகள் வலுவிழந்து விடும் அபாயம் உள்ளது. மேலை நாடுகளில் உள்ளது போல அதிபர் ஆட்சியை கொண்டு வருவதற்கான தொடக்கமாகவே ஒன்றிய அரசின் இந்த செயல்பாடு உள்ளது.

பல மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தவே இயலாத சூழலில் ஒரே நேரத்தில் எப்படி நாடு முழுவதும் தேர்தலை நடத்த முடியும். அதற்கான சாத்தியம் கிடையாது. ஒருவேளை தேர்தலை ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டால் கூட அதற்கான கட்டமைப்புகள் நம்மிடம் உள்ளதா என்றால் கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் போதுமான பணியாளர்களோ அல்லது தேர்தலுக்கு தேவையான உபகரணங்களோ கிடையாது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் வேறு சில பிரச்சனைகளை திசை திருப்பவே சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. திமுகவை பொறுத்தமட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அடிப்படையாகவே எதிர்க்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

The post மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் பரபரப்பு; நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: