நாகை-இலங்கைக்கு ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து: டிக்கெட் விலை குறைப்பு; புதிய சலுகைகள் அறிவிப்பு

நாகப்பட்டினம்: நாகை-இலங்கைக்கு ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது. வானிலை மாற்றம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும் கப்பல் சேவை தொடங்குவது தொடர்பாக ஆய்வு நாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுபம் கப்பல் நிறுவன மேலாண்மை இயக்குநர் சுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவையை பருவநிலை மாற்றத்திற்கு பிறகு டிசம்பர் 19 முதல் தொடங்க திட்டமிட்டிருந்தோம்.

ஆனால் வானிலை மாற்றம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை போன்றவை காரணமாக ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவையை தொடங்க உள்ளோம்.
கடந்த காலங்களில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சென்று வர ரூ.9,200 என்று இருந்ததை மாற்றி தற்போது, ரூ.8,500 ஆகவும், 10 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்துசெல்லும் வகையில் மாற்றி அமைத்துள்ளோம். அதிக பட்சமாக ஒரு நபர் 60 கிலோ வரை எடுத்து செல்ல முடியும். இதற்கு ஆன்லைனில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்காக பேக்கேஜ் முறையில் ரூ.15 ஆயிரம் கட்டணத்தில் 3 நாள் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளோம். அதேபோல் ஆன்மிக சுற்றுலா செல்ல உள்ளவர்கள் 5 இரவு, 6 நாள் தங்க வசதியாக ரூ.30 ஆயிரம் செலவில் பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு sailsubham.com இணையதளத்தில் முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மற்றொரு பயணிகள் கப்பல் சேவையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். துறைமுகத்தில் கட்டமைப்புகள் வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சிறப்பு திட்டத்தை வகுத்துள்ளது. அதற்கான பணிகளையும் விரைவாக தொடங்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாகை-இலங்கைக்கு ஜன.2 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து: டிக்கெட் விலை குறைப்பு; புதிய சலுகைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: