திருமணம் செய்வதாக ஆசைகாட்டி விதவைகள், விவாகரத்து செய்த பெண்களிடம் பணம் மோசடி: வாலிபர் கைது

ஆவடி: மேட்ரிமோனியில் பதிவு செய்யும் விவாகரத்து மற்றும் விதவை பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். ஆவடி காவல் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பூந்தமல்லி, கரையான்சாவடி பகுதியில் வசித்து வருபவர் ஜெஸி (29), இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: நான் இரண்டாவது திருமணத்திற்காக கிறிஸ்டியன் மேட்ரிமோனியில் பதிவு செய்து இருந்தேன். அப்போது அறிமுகம் ஆகிய கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த லெனின்மோகன் (34) என்பவர் திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி செல்போனில் பழகி வந்தார்.

அவருக்கு பணம் தேவைப்படும் போது அடிக்கடி என்னிடம் இருந்து இதுவரை சுமார் 5 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் கூடுதல் ஆணையர் அர்னால்டு ஆகியோரின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கோயம்புத்தூர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த லெனின்மோகன் என்பவரை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார்.

அதில் மதுபான விடுதிக்கு செல்லவும் மற்றும் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கவும் பணம் தேவைப்பட்டதால் மேட்ரிமோனி வலைதளங்களில் பதிவு செய்துள்ள விதவை மற்றும் விவாகரத்தான பெண்களிடம் பேசி பழகி பணம் பெற்று மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்தது தெரிய வந்தது. இதேபோல் ஜெஸியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்து ஏமாற்றி வந்ததையும் லெனின் மோகன் ஒப்புக்கொண்டார். எனவே, அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்து இரண்டு செல்போன்களை கைப்பற்றினர். பின்னர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்வதாக ஆசைகாட்டி விதவைகள், விவாகரத்து செய்த பெண்களிடம் பணம் மோசடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: