×

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ‘பாலஸ்தீனம்’ பையுடன் பிரியங்கா வரக்காரணம் என்ன?: காங்கிரஸ் – பாஜக இடையே மோதல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ‘பாலஸ்தீனம்’ பையுடன் பிரியங்கா வந்ததால், காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவம் காசா மீது போர் தொடுத்த நிலையில், தற்போது வரை அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட மக்கள் போரினால் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் காயமடைந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தி நேற்று நாடாளுமன்றத்திற்கு வரும்போது ‘பாலஸ்தீனம்’ என்று எழுதப்பட்ட பையுடன் வந்தார். ஏற்கனவே ‘தீவிரவாத அடக்குமுறை’ என்ற போர்வையில் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படைகள் படுகொலைகளை அரங்கேற்றி வருவதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீனம்’ என்று எழுதப்பட்ட பையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுடன் தாங்கள் இருப்பதாக பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் உள்ளன’ என்று கூறினார். முன்னதாக இந்தியாவுக்கான பாலஸ்தீன ஆணைய தூதர் அபெட் எல்ராசெக், கடந்த வாரம் பிரியங்காவை சந்தித்து வயநாடு மக்களவைத் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘பாலஸ்தீனம்’ என்று எழுதப்பட்ட பையுடன் பிரியங்கா வந்தது குறித்து ஒடிஷாவைச் சேர்ந்த பாஜக எம்பி சம்பித் பத்ரா கூறுகையில், ‘நேரு – காந்தி குடும்பத்தின் இத்தகைய செயல்கள் ஒன்றும் புதிதல்ல’ என்று விமர்சித்தார். காசா மீதான போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை மோடி அரசு எடுத்துள்ளது. இவ்விசயத்தில் மோடி அரசை விமர்சிக்கும் வகையில், பிரியங்கா காந்தி ‘பாலஸ்தீனம்’ பையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்வினையாற்றிய பிரியங்கா
விமர்சனங்களுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார் பிரியங்கா காந்தி, ‘வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் கொடுமைகளுக்கு ஏதாவது செய்யச் சொல்லுங்கள்; வங்கதேச அரசிடம் பேசுங்கள், முட்டாள் தனமான விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். வங்கதேசம் குறித்து பேசுங்கள், எனது கைப்பை பற்றி அல்ல; யார் முடிவு செய்வது நான் என்ன ஆடை அணிய வேண்டுமென்று? ஒரு பெண் என்ன அணிய வேண்டும் எனக் கூறுவது முழுமையான ஆணாதிக்கம்’ என்று சமூக வலைதளம் மற்றும் பேட்டியில் கூறினார்.

The post நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ‘பாலஸ்தீனம்’ பையுடன் பிரியங்கா வரக்காரணம் என்ன?: காங்கிரஸ் – பாஜக இடையே மோதல் appeared first on Dinakaran.

Tags : Priyanka ,Parliament ,session ,Palestine ,Congress ,BJP ,New Delhi ,Israeli army ,Gaza ,Parliament session ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்திற்கு ‘பாலஸ்தீனம்’ என...