எத்தியோப்பியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்த கென்யா பெண்ணிடம் ₹14.2 கோடி கொக்கைன் பறிமுதல்

மீனம்பாக்கம்: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் கண்காணித்து சோதனை நடத்தினர். அப்போது கென்யாவை சேர்ந்த 35 வயது பெண் பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

உடனே சுங்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று, பெண் சுங்க அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அவரது வயிறு வழக்கத்துக்கு மாறாக பெரிதாக இருப்பது தெரிந்தது. அதனால் அவரை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்று, எக்ஸ்ரே எடுத்தபோது, வயிற்றில் பெரிய அளவிலான கேப்சூல்கள் இருப்பது தெரிய வந்தது. உடனே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவர்களின் உதவியுடன், இனிமா கொடுத்து கேப்சல்களை, கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் எடுத்தனர். இந்த பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 90 கேப்சூல்கள் வெளியில் எடுக்கப்பட்டன. அவற்றை சுங்க அதிகாரிகள் உடைத்து பரிசோதித்தபோது, 1.24 கிலோ கொக்கைன் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 14.2 கோடி.

இதையடுத்து பெண் பயணியை மீண்டும் விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து கைது செய்தனர். அதோடு கொக்கைன் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், இவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலில், போதை கடத்தல் குருவியாக பணியில் இருப்பதாகவும், அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சிலமுறை வந்து சென்றுள்ளதாகவும் தெரியவந்தது. அதனால் டெல்லி, மும்பைக்கும் போதைப்பொருளை கடத்தி இருக்கலாம் என தெரிகிறது. மேலும் சென்னையில் யார், யாரிடம் போதைப்பொருளை கொடுக்க வந்தார்? சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சென்னையில் யார் யார் இருக்கிறார்கள் என சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post எத்தியோப்பியாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்த கென்யா பெண்ணிடம் ₹14.2 கோடி கொக்கைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: