திருச்சி: கை முதல் அந்தரங்க பாகங்கள் வரை டாட்டூ போட்டு மாதம் ரூ.3 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன்(25). இவர், மேல சிந்தாமணி பஜார் பகுதியில் ‘ஏலியன்’ என்ற பெயரில் டாட்டூ ஸ்டூடியோ (பச்சை குத்தும்) கடை கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்துகிறார். இவர் திருவெறும்பூர் கூத்தைப்பார் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன்(24) என்பவரை தனது டாட்டூ கடைக்கு அழைத்துள்ளார். தொடர்ந்து, டிச.9ம் தேதி ஹரிஹரன், அறுவை சிகிச்சை மூலம் ஜெயராமனின் நாக்கை இரண்டாக பிளந்தார்.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் ஹரிஹரன் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் காமினிக்கு கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதி சுகாதாரத்துறை அதிகாரி கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், கோட்டை போலீசார், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வது, மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறி அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து டாட்டூ கடை உரிமையாளர் ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமன் ஆகியோரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
தொடர்ந்து ஹரிஹரனுக்கு சொந்தமான டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி டாட்டூ சென்டரில் இதுவரை 3 பேருக்கு நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது என மருத்துவக் குழு தகவல் தெரிவித்துள்ளது. கை முதல் அந்தரங்க பாகங்கள் வரை டாட்டூ போட்டு மாதம் 3 லட்சம் வரை சம்பாதித்தது தெரிய வந்துள்ளது. சாதாரணமாக டாட்டூ போட 3 ஆயிரம் முதல் பத்தாயிரம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. உடலின் அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
The post டாட்டூ சென்டரில் 3 பேருக்கு நாக்கு ஆபரேஷன்: திருச்சியில் கைதான ஏலியன் பாய் பற்றி பகீர் தகவல் appeared first on Dinakaran.