×

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பணம் பறிப்பு: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

சென்னை: வாணியம்பாடியில் இருந்து சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே போலீஸ் என வழிமறித்து ரூ.20 லட்சம் பணம் பறித்த சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜூனை அகமது. இவர் சிடி ஸ்கேன் மெஷின் வாங்குவதற்காக அவரிடம் பணியாற்றும் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரிடம் ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்து சென்னைக்கு அனுப்பியுள்ளார்.

அதன்படி முகமது கவுஸ் பணத்துடன் நேற்று இரவு திருவல்லிக்கேணி நோக்கி வாலாஜா சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே வரும் போது, 2 பேர் முகமது கவுஸை வழிமறித்து நாங்கள் போலீஸ் என்று கூறி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு, இருவரும், பணத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு முகமது கவுஸ் சிடி ஸ்கேன் இயந்திரம் வாங்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். உடனே இருவரும் பணத்திற்கு ஆவணங்கள் இல்லாததால், இது ஹவாலா பணமா என கேட்டு மிரட்டியுள்ளனர்.

பிறகு பணத்தை காவல் நிலையத்திற்கு வந்து உரிய ஆவணங்கள் கொடுத்துவிட்டு பெற்று கொள்ளுங்கள் என கூறி, கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முகமது கவுஸ், பணம் கொடுத்த உரிமையாளருக்கு போன் செய்ய முன்ற நேரத்தில் 2 பேரும் பணத்தை பையுடன் பறித்து கொண்டு சென்றுவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத முகமது கவுஸ், உடனே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் சம்பவம் நடந்த வாலாஜா சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே சிடி ஸ்கேன் வாங்க வந்த நபரிடம் போலீஸ் என கூறி ₹20 லட்சம் பணம் பறிப்பு: சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Omandurar Government Hospital ,Chennai ,Vaniyambadi ,Dinakaran ,
× RELATED விஜய் புரியாமல் பேசுகிறார்: சரத்குமார் பேட்டி