செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் கிராமத்தில் ஏரி உபரி நீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளதால் ஏரி உபரி நீர் நெர்பயிர் வயல்களின் வழியே பாய்ந்து ஓடுவதால் சுமார் 200 ஏக்கர் நெற்பயிர் மழைவெள்ளத்தில் அழுகி சேதமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதன் துணைக் கால்வாய்களின் மூலமாக செய்யாறு தாலுக்காவில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏரிகள் அதன் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. அந்த வகையில் அனக்காவூர் ஏரியும் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. மழை ஓய்ந்து ஒருவார காலமாகியும் ஏரிக்கு வரும் நீர்வரத்தும், வெளியேறும் நீரின் அளவு குறையவில்லை.
இந்நிலையில் ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் புதர் மண்டியும் மரங்கள் முளைத்தும் தூர்ந்து போனதாலும் ஒரு சில இடங்களில் விவசாயிகளின் ஆக்கிரமிப்பால் கால்வாய் அதன் அகலத்தை இழந்ததாலும் உபரி நீர் அதன் கால்வாயில் செல்ல முடியாமல் கால்வாய் கறைகளை உடைத்துக்கொண்டு உபரி நீரானது நெல் நடவு செய்துள்ள வயல்களை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்த நெற்பயிர் அழுகிப்போய் விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில் அனக்காவூர் ஏரி நீர் பாசன பகுதியான சுமார் 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பகுதியில் நடப்பு பருவத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நேரடி நெல் விதைப்பு முறையில் நடவு செய்துள்ளதாகவும் அதில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் ஏரி உபரி நீரில் மூழ்கி அழுகி போனது.
இப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் பருவ மழை மற்றும் புயல்மழை வெள்ள காலங்களில் ஏரி உபரி நீர், கால்வாய் வழியாக வயல்வெளிகளில் பாய்ந்து தங்களின் பயிர்களை சேதப்படுத்தி விடுகிறது. எனவே புதர் மண்டிக் கிடக்கும் ஏரி உபரி நீர் கால்வாயை தூர்வரி கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பல மனுக்களை கொடுத்தும் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் நேரில் வந்து கால்வாயை பார்வையிட்டு செல்வதோடு சரி தூர் வாரப்படவில்லை.
வருடம் தோரும் இதே அவல நிலை தொடர்வதாகவும் ஒரு ஏக்கருக்கு பத்தாயிரத்திலிருந்து, பதினைந்தாயிரம் வரை செலவு செய்து நடவு செய்து அதை மழைநீருக்கு தாரைவார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
எனவே வேளாண் அதிகாரிகள், நேரில் வந்து தங்களின் நிலங்களை பார்வையிட்டு பாதிப்புகளை கணக்கிட்டு அரசுக்கு தெரியபடுத்தி உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அனக்காவூரில் மழை வெள்ள நீரில் மூழ்கி 200 ஏக்கர் நெற்பயிர் அழுகி சேதம்: கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.