தேனி கலெக்டர் அலுவலகம் அருகே மீண்டும் பயணிகள் ரயில் நிறுத்தம்: கட்டுமான பணிகள் தீவிரம்


தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் அருகே பயணிகள் ரயில் நிறுத்தம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. போடி-மதுரை மீட்டர்கேஜ் ரயில் சேவையானது கடந்த 1928ம் ஆண்டு நவம்வர் 20ம் தேதி துவக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை செயல்பட்டு வந்தது. மீட்டர் கேஜ் ரயில் சேவையின்போது மதுரை, நாகமலை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வள்ளல்நதி, தேனி கலெக்டர் அலுவலகம், தேனி, பூதிப்புரம், போடி ஆகிய இடங்களில் ரயில்நிறுத்தங்கள் செயல்பட்டு வந்தது. தேனி மாவட்டத்தில் விளையும் காபி, ஏலம் உள்ளிட்ட விளைபொருள்களை கொண்டு செல்வதற்காகவே ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சேவையானது பயணிகள் சேவையாக நிலைப்பெற்றது. மீட்டர் கேஜ் ரயில் சேவையின்போது, தேனி மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு ஏலம் அனுப்பப்பட்டது.

தற்போது இந்த மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போடியில் இருந்து சென்னைக்கு பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இச்சேவையானது, வாரத்தில் மூன்று நாட்கள் போடியில் இருந்தும், சென்னையில் இருந்தும் புறப்படும் வகையில் உள்ளது. போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளிலும், சென்னையில் இருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வருகிறது. இந்த ரயிலானது போடியில் புறப்பட்டு, தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், காட்பாடி, வேலூர் வழியாக சென்னையை சென்றடைகிறது. இதனால் போடியில் இருந்து சென்னைக்கு இந்த ரயிலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 500 பேர் வரை பயணித்து வருகின்றனர்.

இதேபோல போடியில் இருந்து மதுரைக்கு செல்லும் பயணிகள் ரயிலிலும் ஏராளமானோர் நாள்தோறும் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் வழித்தடத்தில் முக்கிய நகராக தேனி உள்ளது. தேனி நகருக்கான ரயில்வே நிலையம் தற்போது தேனி நகர் பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட்டிற்கு மேற்குபுறம் சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரயில்நிலையம் செல்லும் சாலையானது மிகக் குறுகியதாகவும், சாலையின் இருபுறமும் கால்நடைகள் வளர்ப்போர் கால்நடைகளை கட்டிப் போட்டிருப்பதால் சுகாதாரக் கேடாகவும் உள்ளது. மேலும், இச்சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருப்பதாலும் பயணிகள் ரயில் நிலையம் செல்ல அச்சமடைந்து ரயில் பயணத்தையே தவிர்க்கும் அவலம் நீடித்து வருகிறது.

போடியில் இருந்து மதுரைக்கு மீட்டர் கேஜ் ரயில்சேவை இருந்தபோது, கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை மதுரை, நாகமலை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வள்ளல்நதி, தேனி கலெக்டர் அலுவலகம், தேனி, பூதிப்புரம், போடி ஆகிய இடங்களில் ரயில்நிறுத்தங்கள் செயல்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே இருந்த ரயில்நிறுத்தத்தில் பயணிகள் ரயில் நின்று சென்றதால் கலெக்டர் அலுவலகம் வரும் அலுவலர்கள் பெரும் பயனடைந்து வந்தனர். மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டு தற்போது சென்னை-போடி, மற்றும் மதுரை-போடி அகல ரயில் சேவை துவக்கிய பிறகு கலெக்டர் அலுவலகம் அருகே இருந்த பயணிகள் ரயில் நிறுத்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் கலெக்டர் அலுவலகம் அருகே ரயில் நிறுத்தம் கொண்டு வரவேண்டும் என ரயில்பயணிகள் வலியுறுத்தி வந்தனர்.

இது குறித்து தினகரன் நாளிதழில் விரிவான கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேனி மாவட்ட நிர்வாகம் தென்னக ரயில்வேக்கு மீண்டும், கலெக்டர் அலுவலகம் அருகே ரயில் நிறுத்தம் அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதனையேற்ற ரயில்வே துறை தற்போது கடந்த 2010ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பயணிகள் ரயில் நிறுத்தப்பகுதியில் மீண்டும் ரயில்நிறுத்தம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து, தற்போது இப்பகுதியில் சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு ரயில்வே பயணிகள் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ரயில்வே மேடையில் ரயில் பயணிகளுக்கான டிக்கட் பெறுவதற்கான அறை கட்டும் பணியும் நடந்து வருகிறது.
தேனி நகரில் தற்போது செயல்பட்டு வரும் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையானது சுகாதார கேடாக உள்ள நிலையில், பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதியில் இருந்து சென்னை செல்ல விரும்பும் பயணிகள் தற்போதுள்ள ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல சிரமம் உள்ளது.

அதேசமயம், தற்போது தென்னக ரயில்வே, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பயணிகள் ரயில் நிறுத்தம் அமைக்கும்போது, இப்பகுதிகளிலிருந்து சென்னை செல்ல விரும்பும் பயணிகள் தேனி புதிய பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து ஓரு ஆட்டோவில் கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்படும் பயணிகள் ரயில் நிறுத்தத்திற்கு வந்து ரயிலில் பயணிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை ரயிலை பயன்படுத்த முடியாத தேனி மாவட்ட மக்கள் இனி வரும்காலங்களில் இந்த ரயில்நிறுத்தத்தை பயன்படுத்த வாய்ப்பு உருவாகி உள்ளது. அதேவேளையில், தற்போது கட்டப்பட்டு வரும் ரயில்நிறுத்த பகுதியில் ரயில் பயணிகளுக்கான இருக்கை வசதிகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி என அடிப்படை வசதிகளுடன் தென்னக ரயில்வே அமைக்க வேண்டும் எனவும் ரயில்பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post தேனி கலெக்டர் அலுவலகம் அருகே மீண்டும் பயணிகள் ரயில் நிறுத்தம்: கட்டுமான பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: