×

பந்தலூர் பகுதியில் குடியிருப்புகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்


பந்தலூர்: பந்தலூர் அருகே சேரங்கோடு பஜார் பகுதியில் வீடுகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதிகளான சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனச்சரகத்திற்கும் உட்பட்ட சேரம்பாடி டேன்டீ, சேரங்கோடு, படச்சேரி, கோரஞ்சால், அய்யன்கொல்லி, தட்டாம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் காட்டு யானைகள் குடியிருப்புகள், கடைகளை உடைப்பது, விவசாய பயிர்களை சேதம் செய்வது, நெடுஞ்சாலையில் குறுக்கிட்டு வாகனங்களை மறிப்பது, வனத்துறை வாகனங்களை சேதம் செய்வது என தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சேரங்கோடு பஜார் பகுதிக்குள் புகுந்து கூலித்தொழிலாளி ஜெயராமன் மற்றும் முருகாயி ஆகியோர் குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்தியது. இதில் முருகாயி என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் யானை, தும்பிக்கையில் வீட்டில் இருந்த உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வெளியே இழுத்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகளை தாக்கி பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அட்டகாசம் செய்யும் யானைகளை கண்காணித்து மீண்டும் வனத்திற்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

The post பந்தலூர் பகுதியில் குடியிருப்புகளை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Bhandalur ,Serangod Bazaar ,Nilagiri district ,Bandhalur ,Serampadi ,Pitargadi Wildlife Area ,Serampadi Danti ,Serangodu ,Badacheri ,Goranjal ,Aiyankolli ,Attacasam ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே ரோந்து சென்ற வனத்துறை...